ADDED : ஜூலை 03, 2025 04:01 AM

சென்னை: தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை நேற்று ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ சந்தித்தார்.
சந்திப்புக்கு பின், வைகோ அளித்த பேட்டி:
தி.மு.க., அரசுக்கு எதிராக, எந்தக் கட்டத்திலும், எந்தப் பிரச்னையிலும் ஒரு வார்த்தை கூட விமர்சனம் வைத்ததில்லை; வைக்கவும் மாட்டேன்.
தி.மு.க.,வுக்கு பக்கபலமாக இருப்பேன் என, கருணாநிதிக்கு அளித்த உறுதிமொழியை என்றும் காப்பேன். இதை ஸ்டாலினிடம் கூறினேன். இந்தியாவுக்கே முன்னோடியாக, ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார்.
எனது, 61 ஆண்டுகால பொது வாழ்வில், 30 ஆண்டுகள் தி.மு.க.,வில் பணியாற்றினேன்; 31 ஆண்டுகளாக ம.தி.மு.க.,வை வழிநடத்தி வருகிறேன்.
ஹிந்துத்துவ, சனாதன சக்திகள், பா.ஜ., என்ற குடையில் இருந்து கொண்டு, திராவிட இயக்கத்தை தகர்க்க வேண்டும்; அழிக்க வேண்டும் என நினைக்கின்றன.
இமயமலையை கூட அசைத்து விடலாம். ஆனால், தமிழகத்தில் திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது.
வாஜ்பாயும், அத்வானியும் எனக்கு மத்திய 'கேபினட்' அமைச்சர் பதவி தருவதாகச் சொன்னபோது, ஏற்க மறுத்தவன் நான்.
கடந்த 2014ல், பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு, அன்றைய இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்ததால், பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறினோம். கொள்கையில் உறுதியாக இருப்பவன் நான். இவ்வாறு அவர் கூறினார்.