வியர்வையை துடைத்தேன்; திருநீறை அல்ல திருமாவளவன் விளக்கம்
வியர்வையை துடைத்தேன்; திருநீறை அல்ல திருமாவளவன் விளக்கம்
ADDED : ஜூன் 24, 2025 03:23 AM

சென்னை: 'ஒரு மணி நேரமாக என் நெற்றியில் திருநீறு இருந்தது. நெற்றி வியர்வையை தான் துடைத்தேன்; திருநீறை துடைக்கவில்லை' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:
மதுரையில் முருக பக்தர்கள் என்ற பெயரில், மோடி பக்தர்கள் மாநாடு தான் நடந்தது. அதை ஹிந்துக்கள் மாநாடு என தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். திருப்பரங்குன்றத்துக்கு நான் சென்று இருந்தேன்.
அரசு அலுவலராக மதுரையில் பணியாற்றியபோது, 30 ஆண்டுகளுக்கு முன் கோவிலுக்குச் சென்றேன். தற்போது, அக்கோவிலுக்கு செல்ல ஆர்வம் எழுந்தது; சென்றேன்.
அங்கு கோவில் மறுசீரமைப்பு பணி நடந்து வருகிறது. எனவே, கருவறையில் உள்ள முருகனை பார்க்க முடியவில்லை.
வெளியே ஓரிடத்தில் ஏற்பாடு செய்திருந்த முருகனை வழிபாடு செய்தேன். பூஜை செய்து திருநீறு பூசினர்; கழுத்தில் மாலை அணிவித்தனர்; தலையில் பரிவட்டம் கட்டினர்.
உடன் வந்த அனைவரும் முருகனை தரிசித்தோம். ஒரு மணி நேரம் கோவிலில் இருந்தோம். ஏராளமானோர் மற்றும் துாய்மை பணியாளர்கள், என்னுடன் படம் எடுத்து கொண்டனர்.
எல்லாம் முடிந்து வாசலுக்கு வந்தபோது, திருமண தம்பதி, 'செல்பி' எடுக்க ஆசைப்பட்டனர். நானே வாங்கி செல்பி எடுத்தேன். அப்போது, நெற்றியை துடைத்தேன். அது வழக்கமான ஒன்று.
திருநீறை பார்த்து துடைக்கவில்லை. வியர்த்திருக்கும் துடைத்திருப்பேன். இதுபோன்று நெற்றியை துடைப்பது வழக்கமான ஒன்று. எந்த உள்நோக்கமும் இல்லாமல் நெற்றியை துடைத்தேன்.
ஒரு மணி நேரம் நெற்றியில் திருநீறு வைத்திருந்த நான், வண்டியில் ஏறும்போது துடைத்தேன் என்றால், அது எப்படி ஹிந்துக்களை அவமதித்ததாகவும், மனதை புண்படுத்தியதாகவும் ஆகும்? திருநீறு வைப்பதில் உடன்பாடு இல்லை என்றால், வைக்கும்போது தவிர்த்திருக்க முடியும்; கையில் வாங்கியிருக்க முடியும்.
கருவறையில் பூஜை செய்வோர், சில இடங்களில் திருநீறை அள்ளி கையில் போடுவர். சில இடங்களில் தான் நெற்றியில் பூசி விடுவர். நான் கையை நீட்டியிருந்தால் கையில் கொடுத்திருப்பர்.
எந்த கோவிலிலும் நான் அப்படி செய்யவில்லை. சில இடங்களில் பூஜை பொருட்களை வாங்கி, கற்பூரம் ஏற்றி, நானும் பூஜை செய்வேன்.
இதில் எனக்கு ஆர்வம் உண்டு. புண்ணியம் கிடைப்பதற்காக திருநீறு பூசுவது இல்லை. அதை அழிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.
நானே பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளேன். தமிழகம் ஏதோ ஒரு திசைக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது. இதுவரை காப்பாற்றப்பட்டு வந்த சமூகநீதி அரசியல் சிதைந்து போகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.