மதுபோதையில் கூட்டு பலாத்காரம்; மறுத்த பெண்களுக்கு அடி, உதை
மதுபோதையில் கூட்டு பலாத்காரம்; மறுத்த பெண்களுக்கு அடி, உதை
UPDATED : மே 14, 2025 01:11 AM
ADDED : மே 14, 2025 12:19 AM

குற்றவாளிகள் கூட்டாக சேர்ந்து, மிகக் கொடூரமாக பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டது, பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியம் வாயிலாக தெரிய வந்துள்ளது.
வழக்கில் எட்டு பெண்கள் மட்டுமே புகார் அளித்துள்ளனர். ஆனால், இக்கும்பல் 30க்கு மேற்பட்ட இளம்பெண்களிடம் நட்பாக பழகுவது போல நடித்து, சகஜமாக பழகிய பின் காமவலை வீசீயுள்ளது. இதற்கு சம்மதிக்காத பெண்களை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களை சகோதரனாக நம்பி பழகிய பெண்களை ஏமாற்றி, இந்த படுபாதக செயலில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு, வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். திருநாவுக்கரசின் பண்ணை வீட்டுக்கு கடத்திச் சென்று, அறைக்குள் நிர்வாணமாக அடைத்து வைத்து, மதுபோதையில் கூட்டாக, இயற்கைக்கு மாறான பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர். அந்த பெண் வலி தாங்காமல் கதறியும் விடாத காமக்கொடூரர்கள், அவரது வாயில் மதுவை ஊற்றி சித்ரவதை செய்துள்ளனர். அந்த பெண் ஒரு வழியாக, பின்கதவு வழியாக தப்பித்து, அந்த கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.
மற்றொரு இளம்பெண்ணை கடத்திச் சென்று, ஒரே நேரத்தில் ஒன்பது பேரும் சேர்ந்து, 15 முறைக்கும் மேல் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோவை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டி, பல மாதங்கள் அந்த பெண்ணை சீரழித்து உள்ளனர். அந்த அப்பாவி பெண், இவர்கள் மிரட்டலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.
திருநாவுக்கரசின் பண்ணை வீடு உட்பட நான்கு வீடுகளில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. சபரிராஜன், திருநாவுக்கரசு மொபைல் போனில், 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதிவு செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காதலிக்கு நேர்ந்த கதி
சபரிராஜன் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுடன் பல நாட்கள் அவரது சம்மதத்துடன், பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான, 50க்கும் மேற்பட்ட நிர்வாண வீடியோக்களை, மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருந்தது, போலீசார் சோதனையில் தெரிய வந்தது.
பைனான்ஸ் மற்றும் பழைய கார்களை விற்கும் தொழில் செய்து வந்த திருநாவுக்கரசு, பல விபசார அழகிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். விபசார தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். பல முக்கிய பிரமுகர்களுக்கு விபசார அழகிகளை சப்ளை செய்து, லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார்.
இதனால், கூட்டாளிகளுடன் சேர்ந்து, கல்லுாரி மாணவியர் மற்றும் அப்பாவி இளம்பெண்களையும் விபசார தொழிலில் ஈடுபடுத்த வலைவீசி இருக்கிறார். ஆசைக்கு இணங்க மறுத்தபோது, கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் சாட்சி விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -