ஊசி மூலம் தர்பூசணியில் சிவப்பு சாயம் ஏற்றும் கொடுமை; ஒரே நாளில் 1200 கிலோ பழங்கள் அழிப்பு
ஊசி மூலம் தர்பூசணியில் சிவப்பு சாயம் ஏற்றும் கொடுமை; ஒரே நாளில் 1200 கிலோ பழங்கள் அழிப்பு
ADDED : மார் 25, 2025 10:24 AM

மதுரை: மதுரை பீ.பி.குளம் பகுதி பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய ஆய்வில் சிவப்பு சாயம் ஏற்றி விற்பனைக்கு வைத்திருந்த 1200 கிலோ தர்பூசணி பழங்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.
மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறியதாவது: பழங்களுக்கு ஊசி மூலம் செயற்கை வண்ணம் (சிவப்பு) ஏற்றுகின்றனர். அதை இரண்டாக வெட்டி பார்வைக்கு வைக்கும் போது அதிக சிவப்புடன் கண்ணைக் கவரும். பொதுமக்கள் இந்த வண்ணத்தை பார்த்து வாங்கி ஏமாறுகின்றனர். பழத்தை வெட்டி 'டிஸ்யூ' பேப்பரால் துடைத்து பார்த்தால் சிவப்புநிற சாயம் பேப்பரில் ஒட்டியிருக்கும்.
பேக்கரி உணவுகளில் கூட அனுமதிக்கப்பட்ட வண்ணங்களை தவிர பிற செயற்கை வண்ணங்களுக்கு தடை விதித்துள்ளோம். பீ.பி.குளம் பகுதியில் உள்ள 5 கடைகளை ஆய்வு செய்த போது செயற்கையாக நிறமேற்றியது தெரியவந்தது. அந்த கடைகளில் இருந்த 1200 கிலோ எடையுள்ள பழங்களை கைப்பற்றி மாநகராட்சி வண்டியில் ஏற்றி திருப்பாலையில் உள்ள மைக்ரோ கம்போசிங் மையத்தில் அழிக்கப்பட்டது. தொடர்ந்து பழக்கடைகளில் ஆய்வு செய்யப்படும் என்றார்.
புகார் தெரிவிக்க
அடுத்த மாதம் மாம்பழ சீசன் துவங்கி விடும். அதிலும் கார்பைட் கல் வைத்து பழுக்கப்பட்டு விற்பனைக்கு வரலாம். பழைய ஆப்பிள்களில் மெழுகு தடவி புதிது போல் சில கடையில் வைத்திருக்கலாம். நுகர்வோருக்கு சந்தேகம் இருந்தால் 94440 42322 வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.