நீர்வள கமிஷன் பார்வைக்கு செல்கிறது 'மேகதாது' விவகாரம்
நீர்வள கமிஷன் பார்வைக்கு செல்கிறது 'மேகதாது' விவகாரம்
ADDED : பிப் 01, 2024 11:16 PM

கடந்த ஐந்து ஆண்டுகளாக காவிரி ஆணைய கூட்டத்தில் ஆலோசனைக்கே எடுத்துக் கொள்ளாமல் தடுக்கப்பட்டு வந்த மேகதாது அணை விவகாரம், திடீர் திருப்பமாக மத்திய நீர்வளக் கமிஷனின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28வது ஆலோசனை கூட்டம், டில்லியில் நேற்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடந்தது.
ஆலோசனை
ஆணைய உறுப்பினர்கள் வினீத் குப்தா, கோபால் லால், நீர்வளத்துறை இணை செயலர் ஆனந்த் மோகன் ஆகியோரும் பங்கேற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர்கள் ரம்யா, குளஞ்சிநாதன் ஆகியோரும் பங்கேற்றனர்.கர்நாடகா, கேரளா, புதுச்சேரி சார்பில் அதிகாரி களும் பங்கேற்றனர்.
ஆலோசனையின்போது, அணைகளின் கையிருப்பு நீர் குறித்த விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. தமிழகத்திற்கு என இதுவரையில் 7.61 டி.எம்.சி., நீர் தரப்படாமல் இருக்கிறது. இந்த விவகாரத்தை தமிழக அரசு அதிகாரிகள் எழுப்பினர். அதற்கு, கர்நாடக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
இருப்பினும், நிலுவை நீர் மற்றும் பிப்ரவரி மாத பங்கீடு நீர் என இரண்டுக்குமே ஆணையத்தின் சார்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.அதன்பின் தான் பிரச்னை வெடித்தது. மேகதாது அணை விவகாரம் இன்றைய கூட்டத்தின் விவாத அம்சங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அது குறித்து பேச வேண்டுமென்று கர்நாடகா தரப்பு வலியுறுத்தியது.
இதை ஏற்க முடியாது என தமிழகம் கூறியதும், ஆணையத்தின் தலைவர் ஹல்தர், ''இந்த மேகதாது விவகாரத்தை ஆலோசனைக்கு எடுக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து, ஆராய்ந்து கூறும் பொறுப்பை மத்திய நீர்வள கமிஷனிடம் ஒப்படைக்கலாம் என்று கருதுகிறேன். இது குறித்து கருத்துக்களை கூறலாம்,'' என்றார். இந்த நடவடிக்கை ஒரு ஓட்டெடுப்பு போலவே நடந்து முடிந்தது.
விரிவான அறிக்கை
அதன்படி, மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்ப வேண்டாம் என்று நான்கு ஓட்டுகளும், அனுப்பலாம் என்று ஐந்து ஓட்டுகளும் கிடைத்துள்ளதாக தெரிகிறது.மேகதாது அணை கட்டுவது குறித்து விரிவான அறிக்கை உள்ளிட்ட தொழில்நுட்ப விவகாரங்கள் அனைத்துமே, இந்த நீர்வளக் கமிஷனின் பார்வையில் தான் ஏற்கனவே உள்ளது.
எனவே, வெகு விரைவில் மேகதாது விவகாரம் மத்திய நீர்வள கமிஷனின் பார்வையில் வைக்கப்பட்டு, ஒரு முடிவு எடுக்கப்படலாம் என்பதால், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.-- நமது டில்லி நிருபர் -

