sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

வீராணம் ஏரி நீரால் நோய்கள் ஏற்படுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

/

வீராணம் ஏரி நீரால் நோய்கள் ஏற்படுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

வீராணம் ஏரி நீரால் நோய்கள் ஏற்படுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

வீராணம் ஏரி நீரால் நோய்கள் ஏற்படுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்


ADDED : ஜன 10, 2024 11:23 PM

Google News

ADDED : ஜன 10, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வீராணம் ஏரியில் நச்சுக் கழிவுகள் கலந்திருப்பதால், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்' என, ஒரு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 'ஏரி நீரை சுத்திகரித்து தருவதால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை' என, சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, வீராணம் ஏரி உள்ளது. இதற்கு காவிரி கொள்ளிடம் கீழணையில் இருந்து, வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது.

ஆய்வு கட்டுரை


சென்னை மாநகரின் குடிநீர் தேவையை தீர்ப்பதில், வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.வீராணம் ஏரி குறித்து, ஜன., 2ல் ஐரோப்பாவில் வெளியாகும், 'ஸ்பிரிங் நேச்சர்' என்ற அறிவியல் இதழில், ஒரு ஆய்வு கட்டுரை வெளியானது. சென்னை பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் மாநிலக் கல்லுாரி ஆகியவை இணைந்து, 2018 ஆக., முதல் 2019 மார்ச் வரை, வீராணம் ஏரியின் ஆறு வெவ்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டன. பின்லாந்துஅதில், 10 விதமான நீல பச்சை பாசி எனப்படும், 'சயனோ பாக்டீரியா'க்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து, சென்னை பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ஏழுமலை கூறியதாவது: நீல பச்சை பாசிகள் குறித்து ஆய்வு செய்கிறோம். பின்லாந்து நாட்டில் பேராசிரியை கரீனா சிவானென் என்பவரும், பாசிகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு

உள்ளார். அவரை சந்திக்க, பின்லாந்து சென்றோம். அங்கு உள்ள கடலில் ஆய்வுகளை மேற்கொள்ள எங்களை படகில் அழைத்துச் சென்றார். அந்தப் படகை கடலில் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி ஆய்வு செய்யலாம். அதற்கான

வசதிகள் அனைத்தும் அதில் உள்ளது. ஒரு மாதம் வரை கூட, படகில் தங்கி ஆய்வு நடத்த முடியும். 'இந்தியாவில் இப்படியொரு ஆய்வு நடத்த விரும்புகிறோம்' என பேராசிரியை கரீனா சிவானெனிடம் கூறினோம். 'உங்கள் ஊரில் உள்ள ஒரு பெரிய ஏரியில், இந்த ஆய்வை மேற்கொள்ளலாம்' என, ஆலோசனை கூறினார்.

அதையடுத்தே, நீல பச்சை பாசி குறித்த ஆய்வை வீராணம் ஏரியில் மேற்கொள்ளலாம் என முடிவு எடுத்தோம். பேராசிரியை உமா மகேஸ்வரி, மாணவி ரம்யா ஆகியோருடன் இணைந்து, வீராணம் ஏரியில் ஆய்வு நடத்தினோம்.

தேநீர் சாறை வடிகட்டுவதைப் போல, வீராணம் ஏரியில் இருந்த நீல பச்சை பாசியில் உள்ள செல்களை பிரித்தெடுத்து ஆய்வு நடத்தினோம். அதில் நச்சுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இப்பணி முடிய, நான்கு ஆண்டுகள் ஆகி விட்டது.

ஆய்வு முடிவுகளை, 'ஸ்பிரிங் நேச்சர்' என்ற, புகழ்பெற்ற ஐரோப்பிய சுற்றுச்சூழல் அறிவியல் இதழுக்கு அனுப்பி வைத்தோம். கட்டுரையின் நம்பகத்தன்மை குறித்து, பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்பின்பே, வீராணம் ஏரியில் கலந்திருக்கும் நச்சுப் பொருட்கள் குறித்த ஆய்வுக் கட்டுரை, அந்த இதழில் வெளியானது.

நீல பச்சை பாசி உருவாக காரணம், மழை பெய்யும்போது அடித்து வரும் நீரில், தாதுக்கள் அதிகம் இருப்பதால், பாசிகள் நன்றாக வளர்கின்றன. வீராணம் ஏரியில், உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அளவை விட, நச்சுகள் உள்ளன.

ஏரி நீரில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில், 'அட்டா எலிசா' என்ற சோதனை நடத்தப்பட்டது. பொதுவாக, ஏரி தண்ணீரில், நீல பச்சை பாசிகளின் நச்சு, லிட்டருக்கு ஒரு மைக்ரோகிராம் அளவு இருக்கலாம். ஆனால், வீராணம் ஏரியில், லிட்டருக்கு, 17.22 மைக்ரோகிராம் என்ற அளவில் உள்ளது.

மற்றொரு வகை நீல பச்சை பாசியில், 19.38 மைக்ரோகிராம் என்ற அளவில் நச்சு உள்ளது. தவிர, ஏரியில் 10 வகையான நீல பச்சை பாசிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், இரண்டு வகையான நீல பச்சை பாசிகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.

உடல்நலனுக்கு பாதிப்பு


விளைநிலங்களில் போடப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகியவை கலந்த உரங்கள், வீராணம் ஏரி நீரில் இருப்பது கண்டறியப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ரசாயன ஆலைகளின் கழிவுநீர், சரியான முறையில் சுத்திகரிக்கப்படாமல் ஏரிக்குள் வந்தாலும், நீல பச்சை பாசிகள் உருவாகும். பாசியே நச்சுப் பொருள் என்பதால், ஏரியில் வாழும் உயிரினங்களின் ஈரல், பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது கண்டறியப்பட்டது.

தீர்வு: ஏரி நீரில் நீல பச்சை பாசி உருவாவதை கட்டுப்படுத்த, செயற்கை ரசாயன உரங்கள், ஏரிக்குள் வருவதை தடுக்க வேண்டும். ஏரி நீர் தேங்காமல் ஓடுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஏரியைச் சுற்றிலும், ரசாயன உரங்களை உறிஞ்சும் புற்களை வளர்க்க வேண்டும்.

அவ்வப்போது ஏரியில் உள்ள நீரின் தரத்தை, கண்காணிக்க வேண்டும். ஒருவேளை, நச்சுத்தன்மை நீடித்தால், ரசாயன பொருட்கள், ஏரி நீரில் கலக்கும் இடத்திலேயே அதைத் தடுக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'நீரை சுத்திகரித்து தான் கொடுக்கிறோம்!'


சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏரியின் அருகில் உள்ள வயல்களில் உரங்களை போடுவதால் நச்சு உருவாகிறது. 'மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்கு உலக சுகாதார நிறுவனம் என்னென்ன பரிந்துரைகளை வழங்கியுள்ளதோ, அந்த தரத்தின் அடிப்படையிலே நீரை சுத்திகரித்து கொடுக்கிறோம். ஏரி நீரை அப்படியே கொடுப்பதில்லை. அந்த வகையில், பொதுமக்களுக்கு பாதுகாப்பான நீர் வழங்கப்படுகிறது' என்றார்.

நரம்பியல் நோய்பாதிப்பு வரலாம்!

'அனைத்து வகையான நீர்நிலைகளிலும் நீல பச்சை பாசி காணப்படும். ஒரு கட்டத்தில் அது, சுற்றுச்சூழலுக்கும், நீரை பயன்படுத்தும் மனிதர்களுக்கும், கடுமையான தீங்கை ஏற்படுத்தும்.'இந்த நீரை பயன்படுத்துவோருக்கு, அரிப்பு போன்ற தோல் நோய், கல்லீரல் நோய், ஒருபக்க மரப்பு நோய், 'பார்க்கின்சன், அல்சைமர்' போன்ற நரம்பியல் நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது' என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீரில் வளரும் மீன்களை உண்போருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்.

- அன்புமணி, தலைவர், பா.ம.க.,- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us