கோவையில் இனி நெடுஞ்சாலை திட்டங்கள் வருமா? அடுத்த கட்டத்துக்கு நகராமல் முடங்கியதால் அதிருப்தி
கோவையில் இனி நெடுஞ்சாலை திட்டங்கள் வருமா? அடுத்த கட்டத்துக்கு நகராமல் முடங்கியதால் அதிருப்தி
ADDED : செப் 16, 2026 06:47 AM

கோவை: ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், நெடுஞ்சாலை திட்டங்கள் அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருப்பதால், கோவையில் அபரிமித வாகன போக்குவரத்துக்கு ஏற்ற சாலை வசதிகள் உருவாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவையை பொறுத்தவரை, கோவை புறவழிச்சாலை (நீலாம்பூர் - மதுக்கரை வரை), மேற்குப்புறவழிச்சாலை 2வது, 3வது கட்டம், கிழக்குப் புறவழிச்சாலை, உப்பிலிபாளையம் ரவுண்டானானா, ஜி.டி.நாயுடு மேம்பாலம் நீலாம்பூர் வரை நீட்டிப்பு, லாலி ரோடு சந்திப்பு பாலம் உள்ளிட்ட திட்டங்கள் மிக முக்கியமானவை. மத்திய - மாநில அரசுகளுக்கு, தொழில்துறையினர்தொடர்ந்து வலியுறுத்தியுள்ள போதிலும், இவை இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தபாடில்லை.
மாநில நெடுஞ்சாலைத்துறையின் செயல் திட்டத்தில் ஜி.டி.நாயுடு மேம்பாலம் நீட்டிப்பு சேர்த்திருந்தாலும், இன்னும் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடவில்லை. ஜி.டி.நாயுடு மேம்பாலம் கட்டியபோது, உப்பிலிபாளையம் ரவுண்டானாவை விஸ்தரிக்க மாவட்ட நிர்வாகம் முயற்சித்தது. தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் தடையின்மை சான்று கேட்டதற்கு, அத்துறையே நிதி ஒதுக்கி, மேம்படுத்தப் போவதாக கூறியது.
இப்போது இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசம் கை மாறியிருக்கிறது. இனி, ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்து, திட்ட அறிக்கை தயாரித்து, டில்லிக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்று, நிதி ஒதுக்கி, வேலையை செய்வதற்குள், வாகன போக்குவரத்து பன்மடங்கு அதிகரித்து விடும். இதே பிரச்னையே கோவை புறவழிச்சாலையிலும் நீடிக்கிறது.
முதலில், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அறிக்கை தயாரித்தது; இப்போது ஆறு வழிச்சாலையாக்க ஆணையம் திட்ட அறிக்கை அனுப்பியிருக்கிறது. காஸ் குழாய் செல்லும் காரணத்தை சொல்லி, நிதி ஒதுக்காமல் இருப்பதால் இழுத்துக் கொண்டே இருக்கிறது.
குழப்பம்
மேற்குப்புறவழிச்சாலை முதலாவது கட்டம் மட்டும் முடிந்துள்ளது. இரண்டாவது, 3வது கட்ட பணிகள் செய்தால் மட்டுமே இதன் பலன் முழுமையாக கிடைக்கும். 2வது கட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டிய சூழலில், தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, இத்திட்டத்தை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு செயல்படுத்துமா அல்லது ஆணையம் செயல்படுத்துமா என்ற குழப்பம் நீடிப்பதால், முடங்கி இருக்கிறது.
கிழக்குப்புறவழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு உள்ளது. லாலி ரோடு சந்திப்பில் மேம்பாலம் கண்டிப்பாக வரும் என்கிறார்கள் அதிகாரிகள். திருத்திய திட்ட அறிக்கையை அரசுக்கு இன்னும் அனுப்பாமல் உள்ளனர்.
கோவைக்கான முக்கியமான திட்டங்கள் அனைத்தும் தாமதமாகி வருவதால், முதலீடுகள் திசை மாறிச் செல்ல வாய்ப்பு இருப்பதால் தொழில்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நம்பிக்கை இழக்கும் அரசு
கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன் கூறுகையில், ''கோவை புறவழிச்சாலை இறுதிக்கட்டத்தில் உள்ளது. தமிழக நெடுஞ்சாலைத்துறையை மறுசீரமைப்பு செய்ததால், நிர்வாக நடைமுறை சிக்கல் ஏற்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இதை விரைந்து சரி செய்து, நிதி ஒதுக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், இத்திட்டங்கள் அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருப்பதால், அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதை அதிகாரிகள் உணர வேண்டும்,'' என்றார்.
