/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சித்த மருத்துவ விழிப்புணர்வு ஊர்வலம்
/
சித்த மருத்துவ விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி: புதுச்சேரி வந்த சித்த மருத்துவ விழிப்புணர்வு பைக் ஊர்வலத்தை அமைச்சர் லட்சுமிநாராயணன் வரவேற்றார்.
இந்திய அரசின் ஆயுஷ் துறையின் கீழ் இயங்கும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் மற்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில், சித்த மருத்துவ விழிப்புணர்வு இரு சக்கர வாகன ஊர்வலம் கடந்த 24ம் தேதி டில்லியில் துவங்கியது.
மத்திய இணை அமைச்சர் முஞ்சபாரா மகேந்திரபாய் துவக்கி வைத்தார். சித்த மருத்தவர்கள், ஆராய்ச்சி அலுவலர்கள் உட்பட 22 பேர் டில்லியில் துவங்கி கன்னியாக்குமரி வரை 3,333 கி.மீ., துாரத்தை, பைக்கில் பயணித்து மக்களிடம் சித்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆக்ரா, குவாலியர், நாக்பூர், பெங்களூர், திருப்பதி, சென்னை வழியாக ஊர்வலம் நேற்று புதுச்சேரி வந்தது. கடற்கரை சாலை, காந்தி சிலை அருகில் வந்த இக்குழுவினரை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வரவேற்று வாழ்த்தி, பேசினார்.
புதுச்சேரி ஆயுஷ் இயக்குனரக இயக்குநர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். வில்லியனுார் ஆயுஷ் மருத்துவமனை கண்காணிப்பாளர் இந்திரா, புதுச்சேரி ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சி அலுவலர் கார்த்திகேயன், சித்த மருத்துவர் ஜெயசங்கர் மற்றும் சித்த மருத்துவ மண்டல ஆராய்ச்சி நிலைய மருத்தவர்கள் கலந்து கொண்டனர்.
சித்த மருத்துவ விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், இலவச சித்த மருந்து பெட்டகங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

