/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீரில் மூழ்கும் நெற்களஞ்சியம்... ஆண்டு தோறும் தொடரும் சோகம்: விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்குமா?
/
நீரில் மூழ்கும் நெற்களஞ்சியம்... ஆண்டு தோறும் தொடரும் சோகம்: விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்குமா?
நீரில் மூழ்கும் நெற்களஞ்சியம்... ஆண்டு தோறும் தொடரும் சோகம்: விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்குமா?
நீரில் மூழ்கும் நெற்களஞ்சியம்... ஆண்டு தோறும் தொடரும் சோகம்: விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்குமா?
ADDED : அக் 20, 2025 10:34 PM

பாகூர்:  விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலையால், நீர் போகும் பாதைகள் தடைபட்டுள்ளதால், புதுச்சேரியின் நெல் களஞ்சியம், ஒவ்வொரு ஆண்டும் நீரில் மூழ்கி, விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் 35 ஆயிரம் ஹெக்டருக்கும் அதிகமாக இருந்த வேளாண் நிலங்களின் பரப்பளவு தற்போது 15 ஆயிரம் ஹெக்டருக்கும் குறைவாக உள்ளது. இருப்பினும், புதுச்சேரியின் நெல் களஞ்சியமான பாகூர் பகுதியில் 5000 ஹெக்டருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மாநிலத்தின் மொத்த நெல் உற்பத்தியில் பாகூருக்கு முக்கிய பங்குண்டு. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையால், பாகூர் பகுதியில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. மழைக்கு முன்பாக வடிகால் வாய்க்கால் துார்வாராததால் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இப்பிரச்னைக்கு, விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலையே முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, விழுப்புரத்தில் இருந்து, மங்கலம், செம்பியம்பாளையம், கோர்க்காடு, சேலியமேடு, பாகூர், சோரியாங்குப்பம் வயல்வெளி வழியாக நாகப்பட்டினம் செல்லும் புறவழிச்சாலையால், பல இடங்களில் வடிகால் வாய்க்கால்களும், இயற்கையான நீர் வழிப்பாதைகளும் தடைப்பட்டுள்ளது.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் போது, இருபுறமும் உள்ள வயல்களில் மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.வெள்ள நீரோட்டம் என்பது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், புறவழிச்சாலை பணியின் போது, நீர் வழித்தடங்கள் ஆங்காங்கே தடைபட்டுள்ளதால், மேற்கு பகுதியில் வயல்களில் தேங்கும் மழை நீர் வடிவதில் சிக்கல் நீடித்துவருகிறது.
இதனால், புதுச்சேரியின் நெல் களஞ்சியமான பாகூர் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது.
புறவழிச்சாலையில் இரு புறமும் சிறிய அளவிலான வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இது, சாலையில் தேங்கும் மழை நீரை வெளியேற்றும் வகையில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்க்காலின் அமைப்பு, வயல்களில் தேங்கும் மழை நீரை வெளியேற்றிடும் அளவிற்கு போதுமானதாக இல்லை. வயல்களில் தேங்கும் மழை நீரை வெளியேற்றும் வகையில் பெரிய அளவில் வடிகால் அமைத்தால்தான் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
எனவே, இது தொடர்பாக, பொதுப்பணித்துறை மற்றும் வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆண்டுதோறும் நீரில் மூழ்கி வரும் புதுச்சேரியின் நெற் களஞ்சியத்தை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

