/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி * சஞ்சு சாம்சன் அரைசதம்
/
இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி * சஞ்சு சாம்சன் அரைசதம்
ADDED : செப் 20, 2025 12:13 AM

அபுதாபி: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. நேற்று ஓமனை 21 ரன்னில் வீழ்த்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் நடக்கிறது. நேற்று அபுதாபியில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில், ஏற்கனவே 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, ஓமனை எதிர்கொண்டது.
'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ரா, வருண் சக்ரவர்த்திக்கு ஓய்வு தரப்பட்டது. அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டனர்.
சாம்சன் அபாரம்
இந்திய அணிக்கு சுப்மன் கில் (5), அபிஷேக் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. மூன்றாவது பேட்டராக சாம்சன் களமிறங்கினார். முகமது நதீம் வீசிய போட்டியின் 5வது ஓவரில், அபிஷேக் 3 பவுண்டரி அடிக்க, 19 ரன் எடுக்கப்பட்டன. போட்டியின் 8வது ஓவரை ராமநந்தி வீசினார். முதல் பந்தில் அபிஷேக் (38 ரன், 15 பந்து) அவுட்டானார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா (1) 3வது பந்தில் ரன் அவுட்டானார்.
அக்சர் படேல் 26 ரன் எடுக்க, ஷிவம் துபே (5) நிலைக்கவில்லை. 41 பந்தில் அரைசதம் அடித்த சாம்சன், 56 ரன்னில் அவுட்டானார். திலக் வர்மா, 29 ரன் (18 பந்து) எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 188/8 ரன் எடுத்தது.
கலீம் அரைசதம்
ஓமன் அணிக்கு கேப்டன் ஜதிந்தர் சிங் (32), ஆமிர் கலீம் ஜோடி துவக்கம் தந்தது. இந்திய பவுலர்கள் ஏமாற்ற, ஓமன் அணி 10 ஓவரில் 62/1 ரன் எடுத்தது. மறுபக்கம் துபே பந்தில் ஹம்மத் அடித்த பந்தை நழுவவிட்டார் அக்சர்.
கலீம் 38 பந்தில் அரைசதம் அடித்தார். குல்தீப் ஓவரில் ஹம்மத், இரண்டு சிக்சர் அடிக்க, ஓமன் வெற்றிக்கு கடைசி 24 பந்தில் 58 ரன் தேவைப்பட, 'டென்சன்' ஏற்பட்டது. ஹர்ஷித் ராணா பந்தில், பாண்ட்யாவில் கலக்கலான 'கேட்ச்சில்' கலீம் (64) அவுட்டாக, இந்திய ரசிகர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. ஹம்மத் (51) பாண்ட்யா பந்தில் அவுட்டானார். ஓமன் அணி 20 ஓவரில் 167/4 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
அர்ஷ்தீப் '100'
சர்வதேச 'டி-20'ல் 100 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பவுலர் ஆனார் அர்ஷ்தீப் சிங். இவர் 64 போட்டியில் இம்மைல்கல்லை எட்டினார். சகால் (96), ஹர்திக் பாண்ட்யா (96), பும்ரா (92) அடுத்தடுத்து உள்ளனர்.