/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: ஸ்மிருதி மந்தனா சதம்
/
இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: ஸ்மிருதி மந்தனா சதம்
இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: ஸ்மிருதி மந்தனா சதம்
இந்தியாவிடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா: ஸ்மிருதி மந்தனா சதம்
ADDED : செப் 17, 2025 10:32 PM

நியூ சண்டிகர்: மந்தனா சதம் விளாச, இந்திய அணி 102 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. நியூ சண்டிகரில் 2வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
மந்தனா விளாசல்: இந்திய அணிக்கு பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்த போது பிரதிகா (25) அவுட்டானார். ஹர்லீன் தியோல் (10), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (17) நிலைக்கவில்லை. தஹ்லியா மெக்ராத் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மந்தனா, ஒருநாள் போட்டி அரங்கில் தனது 12வது சதத்தை பதிவு செய்தார். அபாரமாக ஆடிய மந்தனா, 91 பந்தில் 117 ரன்னுக்கு (4x6, 14x4) அவுட்டானார்.
பின் இணைந்த தீப்தி சர்மா (40), ரிச்சா கோஷ் (29) ஜோடி கைகொடுத்தது. ராதா யாதவ் (6), அருந்ததி ரெட்டி (4) ஏமாற்றினர். ஸ்னே ராணா (24) ஆறுதல் தந்தார். இந்திய அணி 49.5 ஓவரில், 292 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ரேணுகா சிங் (3) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் டார்சி பிரவுன் 3, கார்ட்னர் 2 விக்கெட் வீழ்த்தினர்.
தீப்தி அசத்தல்: சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி (9), ஜார்ஜியா (0) ஏமாற்றினர். பெத் மூனே (18) நிலைக்கவில்லை. எலிஸ் பெர்ரி (44), அனாபெல் (45) ஓரளவு கைகொடுத்தனர். தீப்தி சர்மா 'சுழலில்' ஆஷ்லி கார்ட்னர் (17), தஹ்லியா மெக்ராத் (16) சிக்கினர். அலானா கிங் (2) 'ரன்-அவுட்' ஆனார்.
ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவரில், 190 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் கிரான்டி 3, தீப்தி 2 விக்கெட் சாய்த்தனர். தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி, செப். 20ல் டில்லியில் நடக்கவுள்ளது.
77 பந்தில்...
அபாரமாக ஆடிய மந்தனா, ஒருநாள் போட்டி அரங்கில் அதிவேக சதம் அடித்த இந்திய வீராங்கனைகள் பட்டியலில் 2வது இடம் (77 பந்து) பிடித்தார். முதலிடத்திலும் மந்தனா (70 பந்து, எதிர்: அயர்லாந்து, 2025, இடம்: ராஜ்கோட்) உள்ளார்.
12வது சதம்
ஒருநாள் போட்டி அரங்கில் அதிக சதம் விளாசிய வீராங்கனைகள் வரிசையில் 3வது இடத்தை (தலா 12 சதம்) இங்கிலாந்தின் டாமி பியூமண்ட் உடன் பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் மேக் லானிங் (15 சதம்), நியூசிலாந்தின் சுசீ பேட்ஸ் (13) உள்ளனர்.
ஜெமிமா விலகல்
வைரஸ் காய்ச்சல் காரணமாக இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பாதியில் விலகினார். இவருக்கு பதிலாக தேஜல் ஹசன்பிஸ் தேர்வானார்.