/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
ஆப்கனை வீழ்த்தியது வங்கதேசம்: ஆசிய கோப்பை லீக் போட்டியில்
/
ஆப்கனை வீழ்த்தியது வங்கதேசம்: ஆசிய கோப்பை லீக் போட்டியில்
ஆப்கனை வீழ்த்தியது வங்கதேசம்: ஆசிய கோப்பை லீக் போட்டியில்
ஆப்கனை வீழ்த்தியது வங்கதேசம்: ஆசிய கோப்பை லீக் போட்டியில்
UPDATED : செப் 17, 2025 12:06 AM
ADDED : செப் 16, 2025 10:52 PM

அபுதாபி: ஆசிய கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி 8 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
ஐக்கிய அரபு எமிரேட்சில், ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, ஓமன் உள்ளிட்ட 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
அபுதாபியில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
நல்ல துவக்கம்: 'சூப்பர்-4' சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய வங்கதேச அணிக்கு சைப் ஹசன், தன்ஜித் ஹசன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அஸ்மதுல்லா பந்தில் சைப் ஹசன் ஒரு பவுண்டரி அடித்தார். பரூக்கி வீசிய 3வது ஓவரில், 4 பவுண்டரி விளாசிய தன்ஜித், கஜான்பார் வீசிய 6வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். 'பவர்-பிளே' ஓவரில் முடிவில் வங்கதேச அணி 59/0 ரன் எடுத்திருந்தது. முதல் விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்த போது ரஷித் கான் 'சுழலில்' சைப் ஹசன் (30) போல்டானார்.
தன்ஜித் அரைசதம்: தொடர்ந்து அசத்திய தன்ஜித், முகமது நபி பந்தை சிக்சருக்கு அனுப்பினார். நுார் அகமது பந்தில் கேப்டன் லிட்டன் தாஸ் (9) அவுட்டானார். அபாரமாக ஆடிய தன்ஜித், 28 பந்தில் அரைசதம் எட்டினார். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த தவ்ஹித், நுார் அகமது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். தன்ஜித் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். தவ்கித் (26) ஓரளவு கைகொடுத்தார். ஷமிம் ஹொசைன் (11) நிலைக்கவில்லை.
வங்கதேச அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்தது. ஜாக்கர் அலி (12), நுாருல் ஹசன் (12) அவுட்டாகாமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான், நுார் அகமது தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
சவாலான இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு செதிகுல்லா அடல் (0), இப்ராஹிம் ஜத்ரன் (5) ஏமாற்றினர். குல்பதின் நைப் (16), முகமது நபி (15) நிலைக்கவில்லை. ரஹ்மானுல்லா குர்பாஸ் (35), அஸ்மதுல்லா உமர்சாய் (30) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டன் ரஷித் கான் (20), நுார் அகமது (14) ஆறுதல் தந்தனர்.
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 146 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. வங்கதேசம் சார்பில் முஸ்தபிஜுர் 3 விக்கெட் சாய்த்தார். வங்கதேச அணி (4 புள்ளி) 'சூப்பர்-4' சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. இனி, இலங்கை (4) - ஆப்கானிஸ்தான் (2) மோதும் போட்டியின் முடிவை பொறுத்து 'பி' பிரிவில் 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறும் அணிகள் முடிவாகும்.