/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
டில்லி அணி 'திரில்' வெற்றி: அஷுதோஷ் அரைசதம் விளாசல்: லக்னோ அணி ஏமாற்றம்
/
டில்லி அணி 'திரில்' வெற்றி: அஷுதோஷ் அரைசதம் விளாசல்: லக்னோ அணி ஏமாற்றம்
டில்லி அணி 'திரில்' வெற்றி: அஷுதோஷ் அரைசதம் விளாசல்: லக்னோ அணி ஏமாற்றம்
டில்லி அணி 'திரில்' வெற்றி: அஷுதோஷ் அரைசதம் விளாசல்: லக்னோ அணி ஏமாற்றம்
UPDATED : மார் 25, 2025 12:11 AM
ADDED : மார் 25, 2025 12:02 AM

விசாகப்பட்டனம்: கடைசி ஓவரில் அஷுதோஷ் சர்மாவின் அபார ஆட்டம் கைகொடுக்க, டில்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. லக்னோ அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஆந்திராவின் விசாகப்பட்டனத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் டில்லி, லக்னோ அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
மார்ஷ் விளாசல்: லக்னோ அணிக்கு மார்க்ரம் (15) சுமாரான துவக்கம் தந்தார். முகேஷ் குமார், விப்ராஜ் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய மார்ஷ், 21 பந்தில் அரைசதம் எட்டினார். விப்ராஜ் வீசிய 7வது ஓவரில் 3 சிக்சர் பறக்கவிட்டார் நிக்கோலஸ் பூரன். இரண்டாவது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்த போது முகேஷ் குமார் 'வேகத்தில்' மார்ஷ் (72 ரன், 6 சிக்சர், 6 பவுண்டரி) வெளியேறினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 13வது ஓவரில் வரிசையாக 4 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய பூரன், 24 பந்தில் அரைசதம் கடந்தார். கேப்டன் ரிஷாப் பன்ட் (0) ஏமாற்றினார். ஸ்டார்க் 'வேகத்தில்' பூரன் (75 ரன், 7 சிக்சர், 6 பவுண்டரி) போல்டானார். லக்னோ அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்தது. மில்லர் (27) அவுட்டாகாமல் இருந்தார்.
விக்கெட் சரிவு: கடின இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு பிரேசர்-மெக்குர்க் (1), அபிஷேக் போரெல் (0), சமீர் ரிஸ்வி (4) ஏமாற்றினர். கேப்டன் அக்சர் படேல் (22), டுபிளசி (29), ஸ்டப்ஸ் (34) ஓரளவு கைகொடுத்தனர். டில்லி அணி 113 ரன்னுக்கு 6 விக்கெட்டை (12.3 ஓவர்) இழந்து தடுமாறியது.
அஷுதோஷ் அபாரம்: பின் இணைந்த அஷுதோஷ் சர்மா, விப்ராஜ் ஜோடி நம்பிக்கை அளித்தது. பிஷ்னோய், ஷாபாஸ் அகமது பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசினார் விப்ராஜ். பிரின்ஸ் யாதவ் வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார் அஷுதோஷ். ஏழாவது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்த போது திக்வேஷ் பந்தில் விப்ராஜ் (39) அவுட்டானார். ஸ்டார்க் (2), குல்தீப் (5) நிலைக்கவில்லை.
பிஷ்னோய் வீசிய 18வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய அஷுதோஷ் அரைசதம் எட்டினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டன. ஷாபாஸ் அகமது பந்துவீசினார். மூன்றாவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய அஷுதோஷ் வெற்றியை உறுதி செய்தார். டில்லி அணி 19.3 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 211 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அஷுதோஷ் (66 ரன், 5 சிக்சர், 5 பவுண்டரி), மோகித் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
ராகுல் விலகல்
டில்லி வீரர் லோகேஷ் ராகுல், தனது மனைவி அதியா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்ததால், லக்னோவுக்கு எதிரான போட்டியில் இருந்து விலகினார். விக்கெட் கீப்பராக அபிஷேக் போரெல் களமிறங்கினார்.
21 பந்தில்...
அபாரமாக ஆடிய மிட்செல் மார்ஷ், ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் தனது அதிவேக அரைசதத்தை (21 பந்தில்) சமன் செய்தார். ஏற்கனவே 'பிக் பாஷ் லீக்' போட்டியில் (பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், 2019, இடம்: பெர்த்) மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு எதிராக 21 பந்தில் அரைசதம் விளாசி இருந்தார்.
சிறந்த 'சேஸ்'
பிரிமியர் லீக் அரங்கில் டில்லி அணி, தனது சிறந்த 'சேஸ்' (211 ரன்) வெற்றியை பதிவு செய்தது.
ஐந்தாவது முறை
பிரிமியர் லீக் வரலாற்றில் 5வது முறையாக, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பதிவானது.