ADDED : ஜூன் 24, 2025 10:40 PM

லண்டன்: இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் திலிப் தோஷி 77, காலமானார்.
குஜராத்தை சேர்ந்தவர் திலிப் தோஷி. கடந்த 1979ல் பிஷன் சிங் பேடி ஓய்வுக்குப் பின் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆனார். 1983 வரை போட்டியில் பங்கேற்றார். 28 டெஸ்டில் 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். மொத்தம் 33 டெஸ்டில், 114 விக்கெட் சாய்த்துள்ளார். லண்டனில் வசித்து வந்த இவர், நேற்று மாரடைப்பு காரணமாக, காலமானார். இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் தெரிவித்த இரங்கல் செய்தி:
* சச்சின்
கடந்த 1990ல் இங்கிலாந்தில் திலிப்பை சந்தித்தேன். வலைப்பயிற்சியில் எனக்காக பந்து வீசினார். மிகவும் அன்பானவர். அவருடன் நடத்திய கிரிக்கெட் உரையாடல்களை 'மிஸ்' செய்கிறேன்.
* பரூக் என்ஜினியர்
எனது நெருங்கிய நண்பர் திலிப். முதன் முதலில் இங்கிலாந்த வந்த போது, என்னுடன் தான் தங்கினார். இவரது மறைவு செய்தியை முதலில் நம்பவில்லை.
* சுனில் ஜோஷி
கடந்த 18ம் தேதி திலிப்பிடம் பேசினேன். நன்றாக இருந்தார். மறைவு செய்தி கேட்டு இதயம் நொறுங்கியது. தனிப்பட்ட முறையில் இது பெரிய இழப்பு.
* ரோஜர் பின்னி
சுழற்பந்து வீச்சில் சிறந்த வீரர். களத்திலும், வெளியிலும் 'ஜென்டில்மேன்'. இந்திய கிரிக்கெட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர்.