/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
பி.சி.சி.ஐ., புதிய தலைவர் யார்
/
பி.சி.சி.ஐ., புதிய தலைவர் யார்
ADDED : செப் 21, 2025 11:02 PM

மும்பை: பி.சி.சி.ஐ.,யின் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக 2022, அக்., முதல் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி இருந்தார். கடந்த ஜூலை மாதம் 70 வயதானதால், பி.சி.சி.ஐ., விதிப்படி இவரது பதவி முடிவுக்கு வந்தது. துணை தலைவர் ராஜீவ் சுக்லா, தற்காலிக தலைவராக உள்ளார்.
மும்பையில், வரும் செப்., 28ல் நடக்கவுள்ள பி.சி.சி.ஐ., ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இப்பதவிக்கு டில்லி அணியின் முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹாஸ் 45, விண்ணப்பித்துள்ளார்.
'ஆல்-ரவுண்டரான' மிதுன் மன்ஹாஸ், உள்ளூர் போட்டியில் டில்லி (1998-2015), ஜம்மு காஷ்மீர் (2015-17) அணிகளுக்காக விளையாடினார். பிரிமியர் லீக் அரங்கில் டில்லி (2008-10), புனே (2011-13), சென்னை (2014-15) அணிகள் சார்பில் பங்கேற்றார். இதுவரை 157 முதல்தரம் (9714 ரன், 40 விக்கெட்), 130 'லிஸ்ட் ஏ' (4126 ரன், 25 விக்கெட்), 91 'டி-20' (1170 ரன், 5 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவாகும் பட்சத்தில், பி.சி.சி.ஐ.,யின் 37வது தலைவராக மிதுன் மன்ஹாஸ் பொறுப்பேற்பார்.