/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சென்னை ஓபன் டென்னிஸ் 14 நாட்டு வீரர்கள் பங்கேற்பு
/
சென்னை ஓபன் டென்னிஸ் 14 நாட்டு வீரர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 01, 2024 10:50 PM
சென்னை:நாளை மறுநாள் துவங்க உள்ள சர்வதேச அளவிலான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில், இந்தியா உட்பட 14 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், 'சென்னை ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப்' போட்டிகள், நாளை மறுநாள் சென்னையில் துவங்குகிறது.
இதுதொடர்பாக, நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் கூறியதாவது:
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில், நாளை மறுநாள் துவங்கி, 11ம் தேதி வரை நடக்கிறது. இதில், இந்தியா உட்பட 14 நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டியில், இத்தாலி வீரர் லுகா நார்டி முதல் நிலை வீரராக உள்ளார். அவரை தொடர்ந்து, இந்திய வீரர் சுமித் நாகல், 26, உள்ளார்.
இந்திய வீரர்களான முகுந்த் சசிகுமார், சித்தார்த் விஸ்வகர்மா, மணீஷ் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். இப்போட்டிகள் தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறுகிறது. இதில், ஒற்றையர் மற்றும் இரட்டையருக்கு தனித்தனியாக போட்டி நடக்கிறது. ஒற்றையருக்கு 15 லட்சமும், இரட்டையர் பிரிவில், 6.30 லட்சம் உட்பட மொத்த பரிசுத்தொகை, 1.07 கோடியாக வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில், விளையாட்டுத் துறையின் கூடுதல் செயலர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

