/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரத்துடன் இணையும் 15 ஊராட்சிகளை மேம்படுத்த...ரூ.3,585 கோடி!:குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களுக்கு அறிக்கை தயார்
/
தாம்பரத்துடன் இணையும் 15 ஊராட்சிகளை மேம்படுத்த...ரூ.3,585 கோடி!:குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களுக்கு அறிக்கை தயார்
தாம்பரத்துடன் இணையும் 15 ஊராட்சிகளை மேம்படுத்த...ரூ.3,585 கோடி!:குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களுக்கு அறிக்கை தயார்
தாம்பரத்துடன் இணையும் 15 ஊராட்சிகளை மேம்படுத்த...ரூ.3,585 கோடி!:குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களுக்கு அறிக்கை தயார்
ADDED : பிப் 01, 2024 10:36 PM
தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள 15 ஊராட்சிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களை செயல்படுத்த, 3,585 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர, மழைநீர் கால்வாய்க்கான அறிக்கை தயார் செய்யும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகள், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பேரூராட்சிகள் ஆகிய வற்றை இணைத்து, தாம்பரம் மாநகராட்சி புதிதாக உருவாக்கப்பட்டது.
தாம்பரம் பகுதிக்கு, பாலாறு படுகையை நீராதாரமாக கொண்டு, குடிநீர் திட்டம் பயன்பாட்டில் உள்ளது.
பல்லாவரம், பம்மல், சிட்லப்பாக்கம், அனகாபுத்துார், திருநீர்மலை பகுதிளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கூட்டு குடிநீர் மற்றும் மெட்ரோ குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு, வினியோகிக்கப்பட்டு வருகிறது.
மற்ற பகுதிகளில், உள்ளூர் ஆதாரம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும், தனித்தனி குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதால், அவற்றை பராமரிப்பதில் சிக்கல் நிலவுகிறது. தவிர, அதற்காக செலவிடப்படும் தொகையும் அதிகரிக்கிறது. இச்செலவினங்களை குறைக்கும் முயற்சியில், மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியுடன், சுற்றியுள்ள 15 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. அதனால், எதிர்கால திட்டமாக இந்த ஊராட்சிகளை ஒருங்கிணைத்து குடிநீர், மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை திட்டங்களை செயல்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கவுல்பஜார், பொழிச்சலுார் உள்ளிட்ட ஊராட்சிகளில், போதிய நிதி இல்லாத காரணத்தால், மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. வரி வசூல் போன்ற நிதி ஆதாரங்கள் குறைவு.
மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் இவ்வூராட்சிகள் வளர்ச்சியடையும்; குடியிருப்புகள் பெருகும். குடிநீர், சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் கால்வாய் போன்ற திட்டங்கள் முழுமையாக கிடைக்கும்.
இது தொடர்பாக, அதிகாரிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் ஆகியோருடன் அவ்வப்போது ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சியுடன் புதிதாக 15 ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது. இப்பகுதிகளுக்கு குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களுக்கான அறிக்கை தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது.
இதில், குடிநீர் பணிக்கு 1,575 கோடி, பாதாள சாக்கடைக்கு 2,010 கோடி என, 3,585 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அரசிடம் இருந்து அனுமதியும், நிதியும் கிடைத்தவுடன், 'டெண்டர்' கோரப்பட்டு, பணிகள் துவங்கும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மழைநீர் கால்வாய்க்கும் ஏற்பாடு
தாம்பரம் மாநகராட்சியுடன், 15 ஊராட்சிகளை இணைத்து குடிநீர், பாதாள சாக்கடை திட்டங்களுக்கான அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மழைநீர் கால்வாய்க்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணியை முடித்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்.
- மாநகராட்சிஅதிகாரிகள்

