/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அயோத்தி பால ராமர் பிராண பிரதிஷ்டை: செங்கை பகுதிகளில் சிறப்பு வழிபாடு
/
அயோத்தி பால ராமர் பிராண பிரதிஷ்டை: செங்கை பகுதிகளில் சிறப்பு வழிபாடு
அயோத்தி பால ராமர் பிராண பிரதிஷ்டை: செங்கை பகுதிகளில் சிறப்பு வழிபாடு
அயோத்தி பால ராமர் பிராண பிரதிஷ்டை: செங்கை பகுதிகளில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜன 23, 2024 05:42 AM

உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் நேற்று ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அந்த நிகழ்வு, சித்தாமூரில் உள்ள கோதண்டராமர் கோவிலில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
பிற்பகல் 12:20 மணிக்கு அயோத்தி ராமர் கோவில் பூஜை செய்யப்பட்ட அதே நேரத்தில், கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோதண்டராமருக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என கோஷங்கள் எழுப்பி, பக்தர்கள் வழிபாடு செய்தனர். பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல, அகரம், இரும்புலி, கொளத்துார், மணப்பாக்கம், விளம்பூர், ஆக்கினாம்பட்டு போன்ற பகுதிகளில் உள்ள கோவில்களிலும், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நேரலையில் கண்டு, பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
திருப்போரூர்
திருப்போரூர் கந்தசுவாமி கோவில், தண்டலம் அய்யப்பன் கோவில், செல்லியம்மன் கோவில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவில், நெம்மேலி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கோவில்களில், சிறப்பு யாகம், பூஜை மற்றும் விளக்கேற்றி வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருக்கழுக்குன்றம்
திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து முன்னணி அமைப்பின் சார்பில், ராமருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. லட்சுமிதீர்த்த விநாயகர் கோவில் அருகில், ராமர் படத்திற்கு மாலையிட்டு, ஆராதனையுடன் வழிபாடு நடத்தப்பட்டது.
பக்தர்களுக்கு அன்னதானம், லட்டு வழங்கப்பட்டது. பின், மாலையில் திருவிளக்கேற்றி, தென்மாட வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு திருமஞ்சன வழிபாடு நடந்தது.
மாமல்லபுரத்தில், நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், பக்த பஜனை சபையினர், ராம கீர்த்தனைகள், ஆண்டாள் திருப்பாவை, பிரபந்தம் பாடி, திருமஞ்சனத்துடன் வழிபட்டனர். பக்த ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது.
மதுராந்தகம்
மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலில், நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்நிகழ்வில், ராமர் கீர்த்தனைகள் பாடி, பூஜை செய்து, விளக்கு ஏற்றி மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வழிபட்டனர்.
அச்சிறுபாக்கம் அடுத்த பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில் உள்ள அம்புஜவல்லி தாயார் உடனுறை கரிவரதராஜ பெருமாள் கோவிலில், பூஜை செய்து, விளக்கேற்றி வழிபட்டனர்.
- நமது நிருபர் குழு -

