/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
16 அங்கன்வாடிக்கு புதிதாக கட்டடங்கள் கட்ட...அனுமதி!:வாடகை கட்டடத்தில் இயங்கும் மையங்களுக்கு விடிவு
/
16 அங்கன்வாடிக்கு புதிதாக கட்டடங்கள் கட்ட...அனுமதி!:வாடகை கட்டடத்தில் இயங்கும் மையங்களுக்கு விடிவு
16 அங்கன்வாடிக்கு புதிதாக கட்டடங்கள் கட்ட...அனுமதி!:வாடகை கட்டடத்தில் இயங்கும் மையங்களுக்கு விடிவு
16 அங்கன்வாடிக்கு புதிதாக கட்டடங்கள் கட்ட...அனுமதி!:வாடகை கட்டடத்தில் இயங்கும் மையங்களுக்கு விடிவு
ADDED : ஜன 19, 2024 12:55 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 16 அங்கன்வாடி மைய கட்டடங்கள் புதிதாக கட்ட அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் மையங்களுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. இந்த புதிய கட்டடம், கனிம வள நிதியில் பணிகள் துவக்கப்பட உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சி ஒன்றியங்களில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில், 1,266 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.
இதில், 108 அங்கன்வாடி மையங்கள் தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன.
நிதி ஒதுக்கீடு
இந்த மையங்களில் போதிய வசதிகள் இல்லாததால், குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதனால், அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, முதல்வர் மற்றும் கலெக்டர் ஆகியோரிடம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டங்களில், புதிய கட்டடம் கட்ட, ஊரக வளர்ச்சித் துறைக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, 2021- - 22ம் ஆண்டில், 37 அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் முடிந்தன.
அதேபோல், 2022- - 23ம் ஆண்டில், 41 அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை, 78 அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் முதன்முறையாக, கனிமவள நிதியின் கீழ், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், திருக்கழுக்குன்றம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட் 16 ஊராட்சிகளில், அங்கன்வாடி மையம் கட்ட நிர்வாக அனுமதி வழங்கி, கலெக்டர் ராகுல்நாத் கடந்த 11ம் தேதி உத்தரவிட்டார்.
'டெண்டர்'
இதில், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில், கடமலைபுத்துார், வேலாமூர், கீழ்அத்திவாக்கம், தின்னலுார் ஆகிய ஊராட்சிகள்.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், மெய்யூர், கீழக்கண்டை ஊராட்சிகள், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில், சூணாம்பேடு, கொளத்துார், பெரியகளக்காடி, ஈசூர் ஆகிய ஊராட்சிகள்.
லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், நெடுமரம், கூவத்துார், கொடூர், வீரபோகம், கல்குளம் ஆகிய ஊராட்சிகள், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், புல்வேரி ஆகிய ஊராட்சிகளுக்கு தலா, 14,30,000 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 16 அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட, கனிமவள நிதியில் இருந்து, 2.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கலெக்டர் உத்தரவிட்டார்.
இப்பணிகளுக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் விரைவில் துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனிமவள நிதியில், 16 அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட டெண்டர் விடும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்தவுடன், ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர்கள் புதிய கட்டட பணிகளை கண்காணிப்பர்.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு.

