/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காயலான் கடை தரத்தில் குப்பை வண்டிகள் காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் திணறல்
/
காயலான் கடை தரத்தில் குப்பை வண்டிகள் காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் திணறல்
காயலான் கடை தரத்தில் குப்பை வண்டிகள் காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் திணறல்
காயலான் கடை தரத்தில் குப்பை வண்டிகள் காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் திணறல்
ADDED : மார் 26, 2025 01:52 AM

காட்டாங்கொளத்துார்:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், குப்பை சேகரிக்கும் வாகனங்கள் பற்றாக்குறையாக உள்ள நிலையில், புதிய குப்பை சேகரிப்பு வாகனங்களை வாங்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கடந்த 1961ல் உருவாக்கப்பட்டது. மொத்தம் 39 ஊராட்சிகளை உள்ளடக்கிய இந்த ஒன்றியம், 193.90 ச.கி.மீ., பரப்பளவில் உள்ளது.
ஒன்றியம் முழுதும், அனைத்து ஊராட்சிகளுக்கும் சேர்த்து, 289 துாய்மைப் பணியாளர்கள் உள்ளனர். ஆனால் அனைத்து ஊராட்சிகளுக்கும், 600 பணியாளர்கள் தேவை. இதனால், துாய்மைப் பணிகளில் பெரும் சுணக்கம் நிலவி வருகிறது.
இந்நிலையில், குப்பை சேகரிப்பு வாகனங்கள் பெரும் பற்றாக்குறையாக உள்ளதாகவும், பெரும்பாலான வாகனங்கள் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்பி உள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், ஒவ்வொரு ஊராட்சியிலும் சேகரிக்கப்படும் குப்பை, ஊராட்சி பொது இடத்தில் கொட்டப்பட்டு, அதன் பின், 15 நாட்களுக்கு ஒரு முறை, சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள ஆப்பூர் குப்பைக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மொத்தமுள்ள 39 ஊராட்சிகளுக்கும் 47 டிராக்டர், 3 மினி லாரி, சிறிய மின் வண்டி என, 54 வாகனங்கள் உள்ளன. கடந்த 2023ல், தலா 2.75 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட இந்த 54 மின் வண்டிகளில், பல வண்டிகள் ஒரே ஆண்டில் பழுதடைந்து விட்டன.
இதனால், வீடுதோறும் சென்று குப்பை சேகரிக்கும் பணியில், கடந்த இரு ஆண்டுகளாக கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த மின் வண்டிகள் 'அசெம்பிள்டு செட்' முறையில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் என்பதால், பழுது பார்ப்பதில் பெரும் சிக்கல் உள்ளது.
இதனால், பல ஊராட்சிகளில், இந்த மின் வண்டிகள் 'காயலான்' கடை பொருளாக மாறிவிட்டன.
எனவே, அந்தந்த ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப, புதிய குப்பை சேகரிப்பு வாகனங்களை கொள்முதல் செய்ய வேண்டும். தவிர, துாய்மை பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி, கூடுதல் எண்ணிக்கையில் ஆட்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.