/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளிக்கரணையில் மீட்கப்பட்ட நிலம் எவ்வளவு? மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
/
பள்ளிக்கரணையில் மீட்கப்பட்ட நிலம் எவ்வளவு? மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
பள்ளிக்கரணையில் மீட்கப்பட்ட நிலம் எவ்வளவு? மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
பள்ளிக்கரணையில் மீட்கப்பட்ட நிலம் எவ்வளவு? மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
ADDED : ஜன 19, 2024 01:20 AM
சென்னை:பள்ளிக்கரணையில் இதுவரை மீட்கப்பட்ட சதுப்பு நிலம் எவ்வளவு என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை மாநகராட்சிக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
'பறவைகள் சரணாலயமாக உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், குப்பை கிடங்கையும் அகற்றி அதன் அசல் பரப்பை மீட்டெடுக்க வேண்டும்' என, வழக்கறிஞர் மேகநாதன் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்புகள் குறித்து நாளிதழ்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தும் விசாரித்தது.
இந்த வழக்கில், 2022 ஜன., 31ல் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு:
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள குப்பை கிடங்கை அகற்றி, அந்த இடத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
இப்பகுதியில் நீரின் தரத்தை கண்டறிந்து, சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அதை சுற்றுச்சூழல், பல்லுயிர் பூங்காவாக மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவின்படி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுப்பு முடிந்திருக்க வேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் நில அளவைத் துறை கணக்கெடுப்பை துவங்கவில்லை.
இதை செயல்படுத்துவதில் சிரமம் உள்ளதா என்பதை கண்டறிய சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்ல விரும்புகிறோம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இதுவரை மீட்கப்பட்ட சதுப்பு நிலம் குறித்து சென்னை மாநகராட்சி அறிக்கை அளிக்க வேண்டும். நிலம் மீட்கப்படும் போது, அதை சதுப்பு நிலமாக பராமரிக்க வளத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
பள்ளிக்கரணை பகுதியில் நீரின் தரம் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. குடிநீர் வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில், முழுமையான விபரங்கள் இல்லை.
எனவே, குடிநீர் வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 22ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

