/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடிக்கடி சரிந்து விழும் விளம்பர பேனர்களால் பீதி
/
அடிக்கடி சரிந்து விழும் விளம்பர பேனர்களால் பீதி
ADDED : ஜூன் 24, 2025 12:04 AM

செங்கல்பட்டு, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், சாலை ஓரங்களில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள் சரிந்து விழுவது தொடர்கதையாகி வருவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடையே அச்சம் நிலவுகிறது. இதற்கு தீர்வாக, பேனர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்து, பேனர் வைக்கும் இரும்பு சட்டங்களையும் அகற்ற வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
செங்கல்பட்டு - பெருங்களத்துார் ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை, ஓ.எம்.ஆர்., சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், ராட்சத பேனர்கள் புற்றீசல்போல் முளைத்து வருகின்றன.
உயிருக்கு பாதிப்பு
அரசியல் கட்சிகள், கட்டுமான நிறுவனங்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், என பலதரப்பினரும், போட்டி போட்டு வைக்கும் விளம்பர பேனர்கள், பதாகைகளால் வாகன ஓட்டிகள் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது.
வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பர பேனர்கள் வைப்பதற்கு உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற ஏற்கனவே தடை விதித்துள்ளன.
தவிர, விளம்பர பேனர்களால், எப்போது வேண்டுமானாலும் விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படலாம் என, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறோம். அப்போது மட்டும்
கண்துடைப்பிற்காக சில பேனர்கள் அகற்றப்படுகின்றன. அவற்றை தாங்கும் இரும்பு சட்டங்களை அகற்றுவதில்லை. அதனால், அடுத்த சில நாட்களில் அதே இடத்தில், வேறொரு நிறுவனத்தின் விளம்பர பேனர் அமைக்கப்படுகிறது.
அதையும் மீறி, ராட்சத விளம்பர பேனர்கள் வைப்பதும், பலத்த காற்று வீசும்போது விழுந்து பாதிப்பை ஏற்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது.
அடுத்தடுத்து சம்பவம்
கேளம்பாக்கம், படூர் ஆறுவழிச்சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர், கடந்த வாரம் வீசிய பலத்த காற்றில் சட்டத்துடன் சரிந்து விழுந்ததில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த குப்தா, 42, என்பவர் படுகாயம் அடைந்தார்.
அதேபோல், கடந்த 20ம் தேதி நள்ளிரவு வீசிய காற்றில், கேளம்பாக்கத்தில் வைக்கப்பட்ட ராட்சத விளம்பர பேனர் சரிந்து, மின் கம்பம் மீது விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பல்லாவரம் வேல்ஸ் சிக்னல் அருகே இடதுபுறம், புத்தேரியை ஒட்டி விளம்பரம் பேனர் தாங்கும் ராட்சத இரும்பு சட்டம், கடந்த 21ம் தேதி வீசிய பலத்த காற்றில் அடியோடு முறிந்து, ஏரிக்குள் விழுந்தது.
அதுவே, பின்புறமுள்ள திருமண மண்டபம், கடைகள் உள்ள பகுதியில் விழுந்திருந்தால், அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.
இது போல் தொடர் விபத்து மற்றும் உயிரிழப்புகள் நடந்தாலும், பேனர் வைக்கும் கலாசாரம் மட்டும் மாறவே இல்லை. அதை தடுக்காமல், தமிழக அரசும், அதிகாரிகளும் தொடர்ந்து மெத்தனப்போக்கை கடைபிடிப்பதால், விபத்துகளும் தொடர்கின்றன.
300 பேனர்கள்
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சென்னையின் நுழைவு வாயிலாக உள்ள செங்கல்பட்டு - பெருங்களத்துார் இடையிலான, 30 கி.மீ., துாரமுள்ள ஜி.எஸ்.டி., சாலை, ஓ.எம்.ஆர்., சாலை, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை ஆகிய வழித்தடங்களில், தினமும் பல லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன.
தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடைகள் நிறைந்துள்ள இந்த சாலைகளின் இருபக்கமும் உள்ள கட்டடங்கள் மீது, பல டன் எடையுள்ள, 300க்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன.
உடைகிறது
விளம்பர பேனர்களால் கவனம் ஈர்க்கப்படும் வாகன ஓட்டிகள், முன்னே செல்லும் வாகனங்கள் மீது மோதுவதும், சாலையில் சறுக்கி விழுந்து காயமடைவதும் தினமும் நடக்கிறது.
காற்று பலமாக வீசும் போதும், உறுதித்தன்மை இழக்கும் போதும், இந்த விளம்பர பேனர்கள் அடியோடு சாய்ந்து கீழே விழுந்து, விபத்துகளை ஏற்படுத்துகின்றன.
எனவே, சாலை ஓரங்களில் வைக்கப்படும் இதுபோன்ற ராட்சத விளம்பர பேனர்களை, இரும்பு சட்டத்துடன் சேர்த்து முற்றிலுமாக அகற்ற காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.