/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
5 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாத பூங்காக்கள் ஆதனுார் ஊராட்சி மீது குடியிருப்புவாசிகள் புகார்
/
5 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாத பூங்காக்கள் ஆதனுார் ஊராட்சி மீது குடியிருப்புவாசிகள் புகார்
5 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாத பூங்காக்கள் ஆதனுார் ஊராட்சி மீது குடியிருப்புவாசிகள் புகார்
5 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாத பூங்காக்கள் ஆதனுார் ஊராட்சி மீது குடியிருப்புவாசிகள் புகார்
ADDED : ஜன 24, 2024 01:22 AM

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில், 250க்கும் மேற்பட்ட வீட்டு மனைகள் உள்ளன.
இதை வீட்டு மனைகளாக பிரிக்கும் போது, வீட்டு மனைப்பிரிவின் சார்பில், 10 கிரவுண்டுக்கு மேல் பரப்பளவு கொண்ட ஒரு பூங்காவும், 20,000 சதுர அடி கொண்ட மற்றொரு பூங்காவும் ஒதுக்கப்பட்டது.
இந்த மனைப்பிரிவு உருவான 10 ஆண்டுகளில், 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டப்பட்டு, தற்போது, 150 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால், இங்குள்ள இரண்டு பூங்காக்களும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. ஆதனுார் ஊராட்சி நிர்வாகம் மூலம், ஆண்டுக்கு ௩ லட்ச ரூபாய்க்கு குத்தகை விடப்பட்டு, ஒரு பூங்கா தனியார் பள்ளி வாகனங்கள் நிறுத்தும் 'பார்க்கிங்'காக செயல்படுகிறது.
அதோடு, 10 கிரவுண்டுக்கும் மேலான பரப்பளவு கொண்ட மற்றொரு பூங்காவில், ஊராட்சி சார்பில் அத்தி மரங்கள் வளர்க்கப்பட்டு, மக்களுக்கு பயனின்றி ஊராட்சி நிர்வாகத்தின் பிடியில் உள்ளது.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
ஜெயலட்சுமி நகரில் வசிப்போர், கூடியிருப்போர் நலச்சங்கம் உருவாக்கி, முறையாக பதிவு செய்துள்ளோம்.
சங்கத்தின் மூலம், கடந்த ஐந்தாண்டுகளாக, இரண்டு பூங்காக்களிலும் குழந்தைகள் விளையாடும் வகையில், சறுக்கு மரம், ஊஞ்சல் உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
மேலும், பூங்காவின் உட்பகுதியில், முதியோர் நடைபயிற்சி செல்லும் வகையில் நடைபாதை அமைக்க வேண்டும் என, பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம்.
மேலும், கிராம சபை கூட்டங்களில் மனு அளித்திருந்தோம். தொடர்ந்து, இரண்டு கிராம சபை கூட்டங்களை புறக்கணித்து, எங்களின் எதிர்ப்பையும் தெரிவித்தோம்.
ஆனாலும், ஊராட்சி நிர்வாகம் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டு பூங்காக்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்த இரண்டு பூங்காக்களையும் நேரில் ஆய்வு செய்து, முறையாக சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

