/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்ட உள்ளாட்சி பதவிக்காலம்...முடிகிறது!:'வாரி இறைத்து' வென்றவர்களுக்கு அதிர்ச்சி
/
செங்கை மாவட்ட உள்ளாட்சி பதவிக்காலம்...முடிகிறது!:'வாரி இறைத்து' வென்றவர்களுக்கு அதிர்ச்சி
செங்கை மாவட்ட உள்ளாட்சி பதவிக்காலம்...முடிகிறது!:'வாரி இறைத்து' வென்றவர்களுக்கு அதிர்ச்சி
செங்கை மாவட்ட உள்ளாட்சி பதவிக்காலம்...முடிகிறது!:'வாரி இறைத்து' வென்றவர்களுக்கு அதிர்ச்சி
ADDED : ஜன 23, 2024 10:17 PM
மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி நிர்வாக மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம், பதவியேற்று மூன்று ஆண்டுகளில் முடிவடைகிறது. இதனால், ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கலாம் என்ற நப்பாசையில், பணத்தை வாரி இறைத்து வென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தமிழகத்தில், மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி ஆகிய ஊரக உள்ளாட்சி நிர்வாகங்கள் செயல்படுகின்றன.
மாவட்ட ஊராட்சிக் குழு, ஊராட்சி ஒன்றியக் குழு ஆகியவற்றில், குழு தலைவர், துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள் என, மக்கள் பிரதிநிதிகள் பதவிகள் உள்ளன.
கிராம ஊராட்சி மன்றங்களில், தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகள் உள்ளன.
உள்ளாட்சிகளில், கடந்த 2011 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம், கடந்த 2016 அக்டோபரில் முடிந்தது. அதே ஆண்டில், மீண்டும் தேர்தல் நடத்த முயன்றபோது, நீதிமன்ற வழக்குகளால் தடைபட்டது.
வழக்கு முடிவிற்கு பின், 2019 இறுதியில், இத்தேர்தல் நடத்தப்பட்டது. முந்தைய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாக வசதிக்காக, இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் புதிதாக உருவானது.
அதனால், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், மாவட்ட, ஒன்றிய வார்டு பகுதிகள் வரையறுத்தல், வாக்காளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களால், உள்ளாட்சி தேர்தலை அரசு ரத்து செய்தது.
அதே ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்படலாம் என, எதிர்பார்த்த நிலையில், 'கொரோனா' வைரஸ் தொற்று பரவலால், தேர்தல் நடத்த இயலவில்லை.
அதன் பின், 2020ல் அடுத்தடுத்து, தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதும் அமல்படுத்தப்பட்ட பொது ஊரடங்கு காரணமாக, தேர்தல் வாய்ப்பற்ற சூழல் நீடித்தது.
அது தொடர்பான உயர்நீதிமன்ற வழக்கில், அதே ஆண்டு செப்.,க்குள் தேர்தலை நடத்த வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வைரஸ் தொற்று தடுப்பு முன்னேற்பாடுகளுடன், அதே ஆண்டு அக்டோபரில், ஊரக உள்ளாட்சி, 2021 பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சி என, தனித்தனியே தேர்தல் நடத்தப்பட்டது.
மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள். பிற மாவட்டங்களில், கடந்த 2019 தேர்தலில் வென்று பதவி வகிக்கும் பிரதிநிதிகள் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், 2020 ஊரக தேர்தலின் போது, வேட்பாளர்களுக்கு பதவிக்காலம் குறித்து குழப்பம் ஏற்பட்டது.
அதாவது, 2020 முதல் பதவி வகிப்பவர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளுக்கு, 2025 வரை நீடிக்குமா, பிற மாவட்டங்களில், 2019 முதல் பதவி வகிப்பவர்களின் பதவிக்காலம் முடியும் போது, தங்களின் பதவிக்காலமும் முடிந்து விடுமா என, வேட்பாளர்கள் குழம்பினர்.
இதுகுறித்து, முக்கிய அதிகாரிகளிடம் விசாரித்து, ஐந்து ஆண்டுகள் முழுமையாக பதவி வகிக்கலாம் என உறுதிப்படுத்திய பிறகே, தேர்தலுக்காக பெரும்தொகை செலவிட்டனர். பணத்தை வாரி இறைத்தவர்களில், பெரும்பாலானோர் வென்று மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், 16 கிராம ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது.
மேலும், தற்போது செயல்படும் ஆறு பேரூராட்சிகளுடன், அருகில் உள்ள கிராம ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக, கலெக்டர் ராகுல்நாத், ஊராட்சிகள் உதவி இயக்குனரிடம் அறிக்கை கேட்டு கடிதம் அளித்து உள்ளார்.
கடிதத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், 2024 டிசம்பர் மாதம் முடிவடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், இந்த ஆண்டு முடிவதும், ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதும் உறுதியாகியுள்ளது.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலத்தையும், இதே ஆண்டுடன் சுருக்கி, ஒரே தேர்தலாக நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், மூன்றாண்டுகளுடன் பதவியை பறிகொடுக்கும் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

