/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
7 ரயில் நிலைய பணிகள் டிசம்பரில் முடிக்க இலக்கு
/
7 ரயில் நிலைய பணிகள் டிசம்பரில் முடிக்க இலக்கு
ADDED : ஜன 24, 2024 12:39 AM
சென்னை'சென்னை கடற்கரை -- செங்கல்பட்டு மார்க்கத்தில், சென்னை பூங்கா, கிண்டி, மாம்பலம் உள்பட ஏழு ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள், வரும் டிச., மாதத்தில் முடியும்' என சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில், அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக, 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, அம்பத்துார், சூலுார்பேட்டை ஆகிய நிலையங்கள் தேர்வாகி உள்ளன.
இதே போல, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், சென்னை பூங்கா மற்றும் சென்னை கடற்கரை ஆகிய ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.
இந்த நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் சீரான வேகத்தில் நடந்து வருகின்றன.
இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை கடற்கரை -- செங்கல்பட்டு மார்க்கத்தில் சென்னை கடற்கரை, பூங்கா, பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஏழு ரயில் நிலையங்களில் பயணியருக்கான வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளன.
சென்னை பூங்கா நிலையத்தில் நடைமேடை மேற்கூரைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பரங்கிமலை, மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் புதிய டிக்கெட் முன்பதிவு அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த ஏழு ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா நிறுவுதல், பயணியருக்கான டிஜிட்டல் பலகை வசதி உள்ளிட்ட பல வசதிகள் ஏற்படுத்தப்படும். டிசம்பருக்குள் பணிகள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

