/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பட்டிமன்றம்
/
சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பட்டிமன்றம்
ADDED : ஜன 10, 2024 12:26 AM
புத்தக காட்சியில் பேச்சாளர் ராஜா தலைமையில், 'மகிழ்ச்சி தருவது நேற்றைய நினைவுகளா? நாளைய கனவுகளா?' என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடந்தது. நிகழ்ச்சியின் துவக்கம் முதல் இறுதிவரை, நடுவர் ராஜாவின் நகைச்சுவை பேச்சு, அடைமழையிலும் அரங்கிலிருந்தோரை கைதட்டி ரசிக்க வைத்து, சிரித்து, சிந்திக்கத் துாண்டியது.
'நேற்றைய நினைவுகளே' எனும் அணிக்காக அருண், தெய்வானை, ரேவதி சுப்புலட்சுமி ஆகியோர் பேசியதாவது:
மனித மனம் நினைவுகளால் நிரம்பியவை. பால்யத்தில் நாம் செய்தவற்றை எப்போது நினைத்தாலும், அது மகிழ்ச்சியாகவே இருக்கும். ஆனால், நாளைய கனவு என்பது நிறைவேறுமா என்ற சந்தேகத்தை வரவழைத்து, மனதை பயத்தில் ஆழ்த்தும்.
நினைவு வேறு, நிகழ்ச்சி வேறு. எது மனதைவிட்டு அகலாமல் உள்ளதோ, அதுவே நினைவு. கனவு என்பது நிழல். அதில் கற்பனை கலந்திருக்கும். ஆனால், நினைவு என்பது நிஜம். அதில் கற்பனைக்கு இடமில்லை.
தொடர்ந்து, 'நாளைய கனவுகளே' எனும் அணிக்காக, சிவகுமார், அக் ஷயா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசியதாவது:
பழைய நினைவுகளில் கவலை தருபவை, வெறுப்பு தருபவை என, நாம் மறக்க முயல்கிற நினைவுகளும் உண்டு. ஆனால், எதிர்காலக் கனவுகள் அனைத்தும் மகிழ்ச்சியே தரும். கனவே ஒரு மனிதனுக்கு நம்பிக்கை தருகிறது. நம்பிக்கை தருகிற யாவும் மகிழ்ச்சிதான்.
உலகத்தின் அத்தனை கண்டுபிடிப்புகளும், இலக்கியப் படைப்புகளும் ஒரு மனிதரின் கனவு எனும் லட்சியத்தால் உருவாக்கப்பட்டவைதான். வாழ்க்கையில் முன்னேற கனவுகளே புதுப் பாதையை உருவாக்குகின்றன.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
நடுவர் ராஜா பேசியதாவது:
'நம்மை துாங்கவிடாமல் செய்வதே கனவு. எனவே லட்சியத்தை நோக்கிய கனவுகள் காணுங்கள்' என்றார் அப்துல்கலாம். அதன்படி, 'இந்தியா தன்னிறைவு பெற்ற தேசமாக 2047ல் மாறும்' என்பது பிரதமர் மோடியின் கனவாக உள்ளது.
'ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து, தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும்' என்பது முதல்வர் ஸ்டாலின் கனவாக உள்ளது. எனவே, நினைவுகளைவிட எதிர்காலக் கனவுகளே உண்மையான மகிழ்ச்சியைத் தரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -

