/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேதமான சாலைகளை சீரமைக்க கெடு மார்ச் 31 தேர்தல் நெருங்குவதால் நடவடிக்கை
/
சேதமான சாலைகளை சீரமைக்க கெடு மார்ச் 31 தேர்தல் நெருங்குவதால் நடவடிக்கை
சேதமான சாலைகளை சீரமைக்க கெடு மார்ச் 31 தேர்தல் நெருங்குவதால் நடவடிக்கை
சேதமான சாலைகளை சீரமைக்க கெடு மார்ச் 31 தேர்தல் நெருங்குவதால் நடவடிக்கை
ADDED : ஜன 23, 2024 11:33 PM

சென்னையில் சேதமடைந்துள்ள சாலைகளை, வரும் மார்ச் 31ம் தேதிக்குள் சீரமைக்க வேண்டுமென, மாநகராட்சிக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் சாலைகளில், மக்களின் அதிருப்தியை தவிர்க்கும் வகையில், 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சியில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் சுரங்கப் பணிகள், மின் வாரியம் வாயிலாக மின்வடம் புதைக்கும் பணிகள், குடிநீர் வாரியம் வாயிலாக குழாய் பதிப்பு, மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
இத்துடன், மழை காரணமாகவும் சென்னையில் பல சாலைகள் சேதமடைந்து உள்ளன. இதையடுத்து, சேதமடைந்த சாலைகளை கண்டறிந்து சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
கடந்த 2022 - 23ல் மழை மற்றும் பல்வேறு சேவை பணிகளால், 11,248 சாலைகள் சேதமடைந்தன. இந்த சாலைகளை சீரமைக்க, 1,230 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியது.
இதில், 6,000த்திற்கும் மேற்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்ட நிலையில், 5,000த்திற்கும் மேற்பட்ட சாலை சீரமைப்பு பணிகள், மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டன. மழையால் இச்சாலைகள் கடுமையாக சேதமடைந்து, பல்லாங்குழி போல் காட்சியளிக்கின்றன.
கடுமையாக சேதமடைந்த சாலைகளில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டதுடன், விபத்தில் சிக்கியும் சிலர் உயிரிழந்தனர்.
அவ்வப்போது, மாநகராட்சி தற்காலிகமாக, சீரமைப்பு என்ற அடிப்படையில், 'பேட்ச் ஒர்க்' எனப்படும் ஒட்டுப் பணிகளை மேற்கொண்டாலும், அது பெரிய அளவில் பயனளிக்கவில்லை.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், சென்னை மாநகராட்சியில் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க, மாநகராட்சிக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
'தேர்தல் நேரங்களில் பிரசாரங்களில் ஈடுபடும் போது, பல்லாங்குழி போல் சாலை இருக்கக் கூடாது.
அவ்வாறு இருந்தால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, மார்ச் 31ம் தேதிக்குள் சென்னையில் சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில், 5,000த்திற்கும் மேற்பட்ட சாலைகளில் பள்ளங்கள் உள்ளன. இதில், வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் சாலைகளில், பிப்., மாதத்திற்குள் 'பேட்ச் ஒர்க்' மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
அத்துடன், சேதமடைந்து காணப்படும், இதர பணிகள் நடைபெறும் சாலைகளை மார்ச் 31ம் தேதிக்குள் சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, பெரும்பாலான சாலைகளை இரவு நேரங்களில் சீரமைக்கவும், தேவைப்பட்டால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் நேரத்தில் சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூடுதலாக ரூ.210 கோடி ஒதுக்கீடு
சென்னை மாநகராட்சியில் கடந்த 2023ம் ஆண்டில் பெய்த மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க, மாநகராட்சி சார்பில், 210 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒப்பந்தம் அளிக்கப்பட்ட ஒப்பந்தாரர்களிடம் 400 கோடி ரூபாய்க்கு மேல் பணிகள் கிடப்பில் இருப்பதால், அத்தொகையுடன் சேர்ந்து, சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- நமது நிருபர் -

