/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் கம்பம் உடைந்து விழுந்த சம்பவம் மாநகராட்சி பொறியாளர் மீது வழக்கு
/
மின் கம்பம் உடைந்து விழுந்த சம்பவம் மாநகராட்சி பொறியாளர் மீது வழக்கு
மின் கம்பம் உடைந்து விழுந்த சம்பவம் மாநகராட்சி பொறியாளர் மீது வழக்கு
மின் கம்பம் உடைந்து விழுந்த சம்பவம் மாநகராட்சி பொறியாளர் மீது வழக்கு
ADDED : ஜூன் 24, 2025 12:32 AM
தாம்பரம், தாம்பரத்தில், சாலையை கடக்க காத்திருந்த போது, மின் கம்பம் அடியோடு உடைந்து விழுந்து, உணவு டெலிவரி ஊழியர் படுகாயமடைந்த சம்பவத்தில், மாநகராட்சி மின் பொறியாளர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேலுார் மாவட்டம், நாதவனுார் பகுதியை சேர்ந்தவர் சூர்யா, 23. மேற்கு தாம்பரம், புலிக்கொரடு, கன்னடப்பாளையத்தில் தங்கி, பிரபல உணவு வினியோக நிறுவனமான, 'ஷொமேட்டோவில்' பணிபுரிந்து வருகிறார்.
ஜூன் 20ம் தேதி இரவு, உணவு வினியோகம் செய்ய, மேற்கு தாம்பரம், போக்குவரத்து காவல் உதவி மையம் அருகே, ஜி.எஸ்.டி., சாலையை கடக்க காத்திருந்தார்.
அப்போது, பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகத்தில், தாம்பரம் மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பம் ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அடியோடு உடைந்து, சூர்யா தலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த சூர்யா, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாம்பரம் மேம்பாலத்தில் உள்ள மின் கம்பங்கள், இழுத்து கட்டப்படும் தனியார் கேபிள்களால் வலுவிழந்து, எந்த நேரத்திலும் உடையும் நிலையில் உள்ளன என, விபத்து நடந்த சில நாட்களுக்கு முன், 'தினமலர்' நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டு, சுட்டிக் காட்டியது.
அப்போதே மின் கம்பங்களை ஆய்வு செய்து, தனியார் கேபிள்களை அகற்ற நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த விபத்து ஏற்பட்டிருக்காது. இது தொடர்பாக, தாம்பரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, பழுதடைந்த மின் கம்பத்தை சரிசெய்யாமல் அஜாக்கிரதையாக இருந்ததாக, பெயர் குறிப்பிடாத மாநகராட்சி மின் பொறியாளர் மீது, தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி, மின் கம்பத்தை பராமரிக்க வேண்டிய நபர் யார் என்பது குறித்து கண்டறியப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.