/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நுட்பமான கல்லீரல் மாற்று சிகிச்சை 8 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு
/
நுட்பமான கல்லீரல் மாற்று சிகிச்சை 8 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு
நுட்பமான கல்லீரல் மாற்று சிகிச்சை 8 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு
நுட்பமான கல்லீரல் மாற்று சிகிச்சை 8 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு
ADDED : செப் 26, 2025 12:42 AM

சென்னை, நுட்பமான கல்லீரல் மாற்று சிகிச்சை மூலம், 8 வயது சிறுவனுக்கு, ரெயின்போ மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இது குறித்து, ரெயின்போ மருத்துவ மனையின் குழந்தைகள் கல்லீரல் நலத்துறை முதுநிலை நிபுணர் சோம சேகரா கூறியதாவது:
மரபணு ரீதியான அசாதாரண கல்லீரல் பித்த பாதிப்பு என்பது, பி.எப்.ஐ.சி., என்ற 'ப்ராக்ரஸிவ் பேமிலியல் இன்ட்ராஹெப்டிக் கொலாஸ்டசிஸ்' என மருத்துவத் துறையினர் அழைக்கின்றனர்.
அதில் பி.எப்.ஐ.சி., - 13 வகை பாதிப்பு, உலகிலேயே இதுவரை, எட்டு பேருக்குத்தான் கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த பாதிப்பால், பித்த நீர் அசாதாரணமாக சுரந்து கல்லீரலை சேதப்படுத்தும். மஞ்சள் காமாலை, தாங்க முடியாத அரிப்பு, வளர்ச்சி குறைபாடு ஏற்படக்கூடும்.
அத்தகைய பிரச்னைகளுடன் துாத்துக்குடியைச் சேர்ந்த, 8 வயது சிறுவன் ரெயின்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது தாயின் கல்லீரலில் ஒரு பகுதி தானமாகப் பெறப்பட்டு, சிறுவனுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
டாக்டர் மெட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி தலைமையிலான எங்கள் மருத்துவக் குழுவினர், மயக்கவியல் நிபுணர் டாக்டர் சதீஷ் சந்தர் ஒத்துழைப்புடன், அந்த அறுவை சிகிச்சையை சாத்தியமாக்கினர். தற்போது சிறுவன் நலமுடன் பள்ளிக்கு சென்று வருகிறார்.
இதேபோன்று, புதுச்சேரியைச் சேர்ந்த 7 வயது குழந்தைக்கு அவரது தந்தையின் கல்லீரல் தானமாகப் பெறப்பட்டு பொருத்தப்பட்டது.
பிறவிலேயே பித்த நாளம் இல்லாத மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, 5 வயது குழந்தைக்கு அவரது தாயின் கல்லீரலின் ஒரு பகுதியைப் பெற்று, மருத்துவக் குழுவினர் பொருத்தினர்.
குழந்தைகளுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்வது மிகவும் சவாலானது. இருந்தபோதிலும் 15 நாட்கள் இடைவெளியில், மூன்று கல்லீரல் மாற்று சிகிச்சைகளும் வெற்றிகரமாக செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.