/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரியில் அரசு திட்ட பணிகளுக்கு அறநிலைத்துறை இடம் வழங்க எதிர்பார்ப்பு
/
வேளச்சேரியில் அரசு திட்ட பணிகளுக்கு அறநிலைத்துறை இடம் வழங்க எதிர்பார்ப்பு
வேளச்சேரியில் அரசு திட்ட பணிகளுக்கு அறநிலைத்துறை இடம் வழங்க எதிர்பார்ப்பு
வேளச்சேரியில் அரசு திட்ட பணிகளுக்கு அறநிலைத்துறை இடம் வழங்க எதிர்பார்ப்பு
UPDATED : ஜூன் 25, 2025 03:07 PM
ADDED : ஜூன் 25, 2025 12:10 AM

வேளச்சேரி, வேளச்சேரியில் துணை மின் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட திட்ட பணிகளுக்கு, அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளச்சேரியில், மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. சொத்து மதிப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், ஒரு துணை மின் நிலையம் மட்டுமே உள்ளது.
மொத்த பகுதிக்கும் இங்கிருந்து சீரான மின் வினியோகம் செய்ய முடியவில்லை. அடிக்கடி மின்தடை, மின்மாற்றி தீ பிடிப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதால், கூடுதல் துணை மின் நிலையம் அமைக்க, மின் வாரியம் இடம் தேடி வருகிறது.
அதேபோல், தபால் நிலையத்திற்கும் சொந்த கட்டடம் இல்லை. அடிக்கடி இடம் மாறுகிறது. மேலும், கூடுதலாக குடிநீர், கழிவு நீரேற்று நிலையங்கள் அமைக்க இடம் இல்லாததால், குடிநீர், கழிவுநீர் பிரச்னை தலை துாக்குகிறது.
ரேஷன் கடைகள் உள்ளிட்ட சேவை துறை சார்ந்த பல அலுவலகங்கள், வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. குறைந்த வாடகையில் அரசு சார்ந்த மண்டபம் இல்லை.
வேளச்சேரியை பொறுத்தவரை, வருவாய்த்துறை, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில், பல திட்ட பணிகள் செயல்பாட்டில் உள்ளன. இனிமேல் இடமும் இல்லை.
ஆனால், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தண்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஐந்து பகுதிகளில், 9.35 ஏக்கர் இடங்கள் காலியாக உள்ளன.
இதில், சாரதி நகர், தரமணி பிரதான சாலையில் உள்ள இடங்களை, ஆம்னி பேருந்து மற்றும் கார் நிறுத்தமாக மாற்றி, கோவில் நிர்வாகம் வாடகை வசூலிக்கிறது.
தண்டீஸ்வரர் நகர், ஏழாவது பிரதான சாலையில் உள்ள இடம், தனியார் விளையாட்டு மைதானம் அமைக்க குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதுபோல், அரசு திட்டங்களுக்கும் இடம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, வேளச்சேரி பகுதி மக்கள் கூறியதாவது:
வேளச்சேரியில் அரசு இடங்கள் இல்லாததால், அறநிலைத்துறை இடத்தில் துணை மின் நிலையம், குடிநீரேற்று நிலையம் அமைக்க இடம் வழங்கலாம்.
தபால் நிலையம் உள்ளிட்ட அரசு துறைகள் செயல்படும் வகையில், ஒருங்கிணைந்த வணிக வளாகம், மண்டபம் கட்டலாம். இதற்கு, குத்தகை, வாடகை அடிப்படையில் இடத்தை வழங்க, அறநிலையத்துறை முன்வர வேண்டும்.
கூடுதல் துணை மின் நிலையம் மிகவும் அவசியமாக உள்ளது. இடத்தை பெற்று வழங்க, தொகுதி எம்.பி., - எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.