/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளுக்கு பாலியல் கொடுமை தந்தைக்கு சாகும் வரை சிறை
/
மகளுக்கு பாலியல் கொடுமை தந்தைக்கு சாகும் வரை சிறை
ADDED : ஜன 14, 2024 02:31 AM
சென்னை, எட்டு ஆண்டுகளாக மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையை அடுத்த பெரவள்ளூரைச் சேர்ந்த தம்பதியருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளை, 12 வயது முதல் எட்டு ஆண்டுகளாக, அவரது தந்தை பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்துள்ளார்.
தந்தையின் தவறான நடத்தை குறித்து, தன் தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார். கணவரை கண்டித்த மனைவி, அதுகுறித்து போலீசில் புகார் அளிக்காமல், குற்றத்தை மறைத்துள்ளார். தந்தையால் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து, 2022ல் அந்தச் சிறுமி கடிதம் வாயிலாக, போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெரவள்ளூர் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியின் தந்தை, தாய் மற்றும் மாமா ஆகியோர் மீது, 'போக்சோ' சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தந்தை மற்றும் தாயை கைது செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலெட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:
குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும், சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன. முதல் குற்றவாளியான சிறுமியின் தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
குற்றத்தை மறைத்ததற்காக, சிறுமியின் தாய்க்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது சகோதரி ஆகிய இருவருக்கும், தலா 10 லட்சம் ரூபாயை, அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்'.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
***

