/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இலவச 'பார்க்கிங்' பகுதியான இணைப்பு சாலை நடைபாதை
/
இலவச 'பார்க்கிங்' பகுதியான இணைப்பு சாலை நடைபாதை
ADDED : ஜன 24, 2024 12:35 AM

நெசப்பாக்கம், நெசப்பாக்கம் இணைப்பு சாலை நடைபாதை, இலவச வாகன நிறுத்தமாக மாறியுள்ளதால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.
நெசப்பாக்கம் பிரதான சாலையில், தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலை குறுகலாக இருப்பதால், இருவழி போக்குவரத்தில் வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவித்தன.
இதற்கு தீர்வு காண நெசப்பாக்கம், அண்ணா பிரதான சாலை மற்றும் ஏரிக்கரை சாலையை இணைக்கும் வகையில், 300 மீட்டர் நீளத்திற்கும், 60 அடி அகலத்திற்கும், 2.51 கோடி ரூபாய் செலவில், புதிய இணைப்பு சாலை அமைக்கப்பட்டது.
தற்போது, இந்த இணைப்பு சாலையின் இருபுறங்கள் மற்றும் நடைபாதையில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இலவச 'பார்க்கிங்' பகுதியாக இந்த நடைபாதை மற்றும் சாலையில் இருபுறத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது.
எனவே இணைப்பு சாலையில் உள்ள வாகனங்களை அகற்றி, பாதசாரிகள் நடந்து செல்ல வழி ஏற்படுத்த, மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

