/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கன்னட பாளையத்தில் 'குப்பை மலை' வாகனங்களை அனுமதிக்க மறுத்து எதிர்ப்பு
/
கன்னட பாளையத்தில் 'குப்பை மலை' வாகனங்களை அனுமதிக்க மறுத்து எதிர்ப்பு
கன்னட பாளையத்தில் 'குப்பை மலை' வாகனங்களை அனுமதிக்க மறுத்து எதிர்ப்பு
கன்னட பாளையத்தில் 'குப்பை மலை' வாகனங்களை அனுமதிக்க மறுத்து எதிர்ப்பு
ADDED : ஜன 23, 2024 12:20 AM

தாம்பரம், மேற்கு தாம்பரம், கன்னடபாளையத்தில் குப்பைக் கிடங்கு உள்ளது. ஆரம்பத்தில் தாம்பரம் நகரத்தில் சேகரமாகும் குப்பையை அங்கு கொட்டினர். காலப்போக்கில் அதிகரித்து, குப்பைக் கிடங்காகவே மாற்றி, லோடு லோடாக எடுத்து வந்து கொட்டினர்.
தொடர்ச்சியாக, 40 ஆண்டுகள் கொட்டப்பட்டதால் பல ஆயிரம் டன் குப்பை மலை போல் தேங்கியது. துர்நாற்றம், கொசு மற்றும் ஈ தொல்லையும் அதிகரித்து, சுற்றியுள்ள குடியிருப்புகளில் பெரும் பாதிப்பை சந்தித்தனர். தோல் பாதிப்பு, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
குப்பையால் நிலத்தடி நீரும் கெட்டு, கன்னடபாளையத்தில் வசிக்க முடியாத சூழலும் ஏற்பட்டது. கிடங்கை காலி செய்து, அப்பகுதியினரின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று போராடினர்.
தொடர்ந்து 40 ஆண்டு கள் நடந்த போராட்டத்தின் விடிவாக, சில மாதங்களுக்கு முன் அங்கிருந்த குப்பை முழுதுமாக அகற்றப்பட்டது. லாரிகளில் எடுத்துச் சென்று, ஆப்பூர் அருகேயுள்ள கொளத்துாரில் கொட்டினர். பெரும் பிரச்னையாக விளங்கிய குப்பைக் கிடங்கு காலி செய்யப்பட்டதால், அப்பகுதியினர் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், அங்கு மீண்டும் குப்பை கொட்டப்பட்டு மலைபோல் தேக்கி வைக்கப்பட்டு, மீண்டும் பழைய நிலை உருவாகியுள்ளது.
நாள்தோறும், ஐந்து மண்டலங்களில் இருந்து சேகரிக்கப்படும், 250 டன்னுக்கும் அதிகமான குப்பையை இங்கு கொட்டுகின்றனர். இதனால், அப்பகுதியினர் மீண்டும் அவஸ்தைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், இங்கிருந்து குப்பை எடுப்பது, இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்பணிக்கு மாநகராட்சி அதிகாரிகள் டெண்டர் விடாமல் அலட்சியமாக இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
குப்பையை அகற்றாத தோடு, தொடர்ந்து கொட்டுவதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை கிடங்கிற்குள் வாகனங்கள் செல்வதை தடுத்து நிறுத்தினர். இதனால், குப்பை கொட்ட முடியாமல் வாகனங்கள் வரிசையில் காத்து கிடந்தன. கிஷ்கிந்தா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்த, நான்காவது மண்டல குழு தலைவர் காமராஜ், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கன்னடபாளையத்தில் தேங்கியுள்ள குப்பையை அகற்ற முயற்சி மேற்கொண்டதை அடுத்து, தொடர்ந்து குப்பை கொட்ட வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஓரிரு நாட்களில் இங்கிருந்து குப்பை எடுக்கும் பணி தொடங்கும் என்று தெரிகிறது.

