ஆர்.கே.சுவாமி ஹால் - நந்திதா
..............................................
புஷ்ப ஹஸ்தத்தோடு அரங்கினுள் நுழைந்து ஆரபி ராக ஜேம் ஜேம் புஷ்பாஞ்சாலியை நந்திதா, ஆர்.கே.சுவாமி ஹாலில் தன்னுடைய நாட்டிய நிகழ்ச்சியை வழங்க துவங்கினார்.
கணபதிக்கும், கண்ண பெருமானுக்கும், அவையில் வீற்றிருக்கும் அனைவருக்கும் வணக்கம் கூறி, பிரேங்கண நிலையில் கணபதியாய் அமர்ந்து அடுத்த உருப்படிக்கு சென்றார்.
கண்டசாபு தாளத்தோடு கவுளை ராகத்தில் தில்லை காளியை ஆராதித்தார்.
மிஸ்ரசாபு தாளத்தோடு 'தில்லை அம்பலத்தில் வீற்றிருக்கும் நாயகனே அங்கு நடம் செய்பவனே, கற்பனைக்கும் எட்டாத உயரம் உன் உள்ளம் அதில் வாடும் என்னுள்ளம் தேருமோ' என தில்லை நாதனை போற்றிய சப்தம்.
காதலால் ஆர்ப்பரிக்கும் தன் நாயகனின் முகம் காண தேடி வர ஆரம்பித்தது சாருகேசி வர்ணம்.
நாயகனே மாலையிட காத்திருக்கும் நாயகி, அவர் வந்த உடன் ஏன் இவ்வளவு நேரம் என கோபித்துக் கொள்ள அவளை நாயகன் சமாதானம் செய்கிறார்.
இருவரும் மாலையிட செல்லும்போது, நாயகனாகிய மாயவன் மறைந்து விட 'இன்னும் என் மனம் அறியாதவர்' என்ற வரிகளுக்கு சஞ்சாரித்தார். தொடர்ந்து பூதகி தன் முலைப்பால் கொடுத்து, கண்ணனை கொல்ல வேண்டும் என நினைக்க, இறுதியில் அந்த அரக்கியே கண்ணனிடம் மாண்டு விடுவதையும் கூற, 'பகல் இரவெல்லாம் உன் நினைப்பிலேயே உள்ளேன்' என முத்தாயிஸ்வர சாஹித்யங்கள் வெளிப்படுத்தின.
'குழலுாதும் அழகா என் கண்ணா நான் காணும் அனைத்தும் எனக்கு நீயே, ஆருயிரே என்னை ஆளவா' என, சரணப்பகுதி நிறைவடைந்தது.
பவானி, சில்பா, பாலாஜி, ரமேஷ் ஆகியோரின் பக்கவாத்திய இசை குழுவோடு தீம்... தீம்தா என்ற திலங் ராக தில்லானாவை உசி அடவோடு அரங்கை வலம் வர, உள்ளம் எனும் கோவில் குடியிருக்கும் வேலவனை பணிந்து அருள் பெற, நிகழ்ச்சி நிறைவடைந்தது.
*****

