/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
50 ஆண்டுகளுக்கு பின் மேடையேறிய 'கம்பன் காட்சி'
/
50 ஆண்டுகளுக்கு பின் மேடையேறிய 'கம்பன் காட்சி'
ADDED : ஜன 23, 2024 12:30 AM

சென்னை, சின்மயானந்தாவின் முயற்சியால், 'கம்பன் காட்சி' நாடகம் 1981ல் தயாரிக்கப்பட்டது. இதில், கம்பனின் கவிதைகள் எடுத்தாளப்பட்டு, வசனம் மற்றும் பாடல்களாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதற்கு கே.வி.மகாதேவன் இசையமைக்க, பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியன், வாணிஜெயராம் பாடியிருந்தனர். அப்போது, சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுதும் இந்த நாடகம் மேடையேறி புகழ் பெற்றது.
இந்நிலையில், 50 ஆண்டு இடைவெளிக்குப் பின், சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் சென்டரில் இந்நாடகம் சின்மயா யுவகேந்திரா சார்பில் நேற்று மீண்டும் மேடையேறியது. இதில், பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், பணிக்குச் செல்லும் இளைஞர்கள் என, 70க்கும் மேற்பட்டோர் நடித்தனர்.
ராமாயணத்தை கம்பர் எழுதத்துவங்குவதில் இருந்து நாடகம் துவங்குகிறது. கூனிக்கும், கைகேயிக்கும் நடக்கும் உரையாடலில் துவங்கி, வரம் தந்து தசரதன் உயிர்விடுவது, ராமனும் சீதையும் காடாள புறப்படும் போது லெட்சுமணனும் உடன் செல்வது என கதை விறுவிறுப்பாக செல்கிறது.
ராமனின் பாதுகையை பரதன் வாங்கி திரும்புவது, லெட்சுமணனிடம் சூர்ப்பனகை மூக்கறுபட்டு சீதையை கடத்த ராவணனை துாண்டுவது, சிவனடியார் வேடமிட்டு சீதையை ராவணன் கடத்துவது, சீதையை மீட்டு பட்டாபிஷேகம் செய்வது என, ராமாயணத்தின் அனைத்து காட்சிகளையும் விறுவிறுப்புடன் இரண்டு மணி நேரத்தில் காட்சியாக்கி உள்ளனர்.
இளந்தலைமுறையிடம் பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதற்கு சாட்சியாக இந்த நாடகம், பார்வையாளர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

