/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மார்கழி இசை திருவிழா - சிரிப்பையும் சிந்தனையையும் துாண்டிய நாடகம்
/
மார்கழி இசை திருவிழா - சிரிப்பையும் சிந்தனையையும் துாண்டிய நாடகம்
மார்கழி இசை திருவிழா - சிரிப்பையும் சிந்தனையையும் துாண்டிய நாடகம்
மார்கழி இசை திருவிழா - சிரிப்பையும் சிந்தனையையும் துாண்டிய நாடகம்
ADDED : ஜன 14, 2024 02:22 AM

பல விதமான இசை வாத்தியங்களுடன், நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்கில் இசை நிகழ்ச்சியை வழங்குவதற்குப் பெயர் 'ஜுகல்பந்தி'
அதேபோல, குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதிசயம் இருந்தாலும், பாசமும், உண்மையும் இருந்தால் ஒவ்வொரு குடும்பமும் இசை மயமாகத்தான் இருக்கும் என்பதை நகைச்சுவையோடு கூறியது, ஜுகல்பந்தி நாடகம்.
மாமனார் சிவராமன், அலுவலகத்தில் செய்யும் அதிகாரத்தை, ஓய்வுபெற்ற பின் குடும்பத்தில் காண்பித்ததால், மருமகள் கிரிஜாவுக்கு பிடிக்கவில்லை. கணவர் கணேசனிடம் கூறி, மாமனாரை முதியோர் இல்லத்தில் அனுப்புவதில் முனைப்பாக இருக்கிறார்.
இப்பிரச்னை குறித்து கணேசன், அலுவலக ஊழியரான நந்தினியிடம் கூறுகிறார். அதற்கு அவர், 'நீங்கள் இருவரும் வெளிநாடு சென்று வந்தால், உன் மனைவியிடம் மாற்றம் ஏற்படும். அதுவரை சிவராமனை என் வீட்டில் வைத்து பார்த்துக் கொள்கிறேன்' என்கிறார்.
நந்தினிக்கு, முதியவர்கள் மனம் வருந்துவதைப் பார்க்க சகிக்காத மனம் கொண்டவர். அவரின் கணவர் விக்னேஷ். நந்தினி, தாய் லலிதாவின் நலனில் அக்கறையோடு இருப்பவர். வீட்டிற்கு ஒரு வாரிசு வேண்டும் என்று காத்திருக்கும் லலிதா, குழந்தையை தத்தெடுக்க துடிப்பவர் நந்தினி.
இதற்கிடையே, அந்தக் குடும்பத்துக்கு விருந்தாளியாக வந்து சேரும் சிவராமன் அடிக்கும் லுாட்டியும், இந்த கதாபாத்திரங்களின் ஸ்ருதி பேதம், எப்படி ஒரே ஸ்ருதியில் சங்கமிக்கின்றன என்பதும்தான் நாடகத்தின் கதை.
நந்தினி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் மன ஓட்டத்தையும் கண்டுகொள்கிறார் சிவராமன். அதை உடைக்க அவர் தேர்ந்தெடுக்கும் உபாயத்தால் மன ஓட்டம் வெளிப்பட்டதா; நந்தினி குழந்தையை தத்தெடுத்தாரா, சிவராமனின் மருமகளிடம் ஏற்பட்ட மாற்றம் என்ன, லலிதாவின் மன மாற்றத்திற்கு காரணம் என்ன, போன்ற கேள்விகளுக்கு சுவாரசியமாகவும், கலகலப்பாகவும் விடை கொடுக்கிறது ஜுகல்பந்தி.
இந்த நாடகம் சிரிக்கவும், சிந்திக்கவும், நாட்டிற்கு ஒரு தகவலாகவும் எழுதி, இயக்கியுள்ளார் சிவராமனின் நண்பர் செல்லப்பாவாக வரும் எஸ்.எல்.நாணு.
மறதி நோயால் பாதிக்கப்பட்டவராக ரசிகர்களுக்கு அறிமுகமாகும் சிவராமனாக வரும் பிரபல நாடக நடிகரும், திரைப்பட நடிகருமான காத்தாடி ராமமூர்த்தி, தனக்கே உரிய இயல்பான நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்துவதில், ரசிகர்களை ஆட்கொள்கிறார்.
மற்ற கதாபாத்திரங்களில் அனு சுரேஷ், சாய் பிரசாத், கீதா நாராயணன், கணபதி சங்கர், ஸ்ரீனிவாசன் ஆகியோர் இயல்பான நடிப்பு வெளிப்படுத்தினர். மொத்தத்தில் ஒன்றரை மணிநேரம் போனதே தெரியாமல், சிரிப்பலையில் ரசிகர்கள் மூழ்கினர்.
மடிப்பாக்கம் சத் சங்கத்தில், ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் சார்பில் இந்நாடகம் நிகழ்த்தப்பட்டது.
- -நமது நிருபர்- -

