ADDED : ஜன 23, 2024 12:43 AM
சென்னை, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், கொசு ஒழிப்பு உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் மேயர் பிரியா பேசியதாவது:
கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, 3,319 பணியாளர்கள், போதிய அளவில் உபகரணங்கள் உள்ளன. எனவே, காலை, மாலை நேரங்களில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். வீடுகள், சுற்றுப்புறங்களில் கொசு உருவாக காரணமாக இருந்தால், அங்கு துாய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் இடையூறாக சாலைகள், தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வகையில், 2022ம் ஆண்டில் 7,199 மாடுகள், கடந்தாண்டு 4,237 மாடுகள், இந்தாண்டில் 122 மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தெருநாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதுடன், வெறிநாய்க்கடி நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

