/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உயிர்பலி வாங்கும் தடுப்பு கற்கள் மணலியில் வாகன ஓட்டிகள் அச்சம்
/
உயிர்பலி வாங்கும் தடுப்பு கற்கள் மணலியில் வாகன ஓட்டிகள் அச்சம்
உயிர்பலி வாங்கும் தடுப்பு கற்கள் மணலியில் வாகன ஓட்டிகள் அச்சம்
உயிர்பலி வாங்கும் தடுப்பு கற்கள் மணலியில் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : பிப் 02, 2024 12:14 AM

திருவொற்றியூர், நெடுஞ்சாலை, விரைவு சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தற்காலிக தடுப்புக் கற்களால், உயிர் பலி ஏற்படுவதாக, வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மணலியில், பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி விரைவு சாலையிலும், திருவொற்றியூரில் எண்ணுார் விரைவு சாலையிலும், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
மணலி, மாதவரம், பொன்னேரி, மீஞ்சூர், மணலி புதுநகர், விச்சூர் போன்ற பகுதிகளில் இருந்து, கன்டெய்னர் பெட்டக முனையங்களில் இருந்து வெளியேறி, சென்னை துறைமுகம் நோக்கிச் செல்லும் டிரெய்லர் லாரிகளுக்கு, இச்சாலைகளே பிரதான வழி.
இந்நிலையில், சமீபத்தில் போக்குவரத்து காவல் துறை சார்பில், கன்டெய்னர் மற்றும் டிரெய்லர் லாரிகள் செல்ல ஏதுவாக, சாலையில் தற்காலிக கான்கிரீட் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
இரு தடுப்பு கற்களுக்கு இடையே, ராட்சத கயிறு கொண்டு கட்டி வைத்துள்ளனர். இதன் காரணமாக, கனரக வாகனங்கள் தனியே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தற்காலிக கான்கிரீட் தடுப்பு கற்கள் இரவு நேரங்களில் சரியாக தெரியாமல் பைக், ஸ்கூட்டர், ஆட்டோ, கார் போன்ற இலகுரக வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
மேலும், கான்கிரீட் கற்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ராட்சத கயிறு தெரியாமலும் விபத்துகள் நேரிடுகின்றன.
சில நேரங்களில், வேகமாக வரும் வாகனங்கள் திடீரென, தற்காலிக தடுப்பு கற்கள் இருப்பது தெரியாமல் மோதி, உயிரிழப்பு ஏற்படுகிறது.
கன்டெய்னர், டிரெய்லர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதற்கு தனியே வழி ஏற்படுத்துவது நல்ல முயற்சி என்றாலும், தற்காலிக தடுப்பு கற்களால் உயிர் பலி ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, தற்காலிக தடுப்பு கற்கள், இரவு நேரத்திலும் தெரியும்படி வழிவகை செய்ய வேண்டும். தவிர, கயிறு இன்றி இடைவிடாமல் தடுப்பு கற்களை அடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால், நிரந்தரமாக கான்கிரீட் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

