/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை'
/
'குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை'
'குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை'
'குடிநீர், கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை'
ADDED : ஜன 23, 2024 12:26 AM
கோடம்பாக்கம், குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண, 30 ஆண்டுகளாக எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை என, கோடம்பாக்கம் மண்டல குழு கூட்டத்தில், குடிநீர் வாரிய அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.
கோடம்பாக்கம் மண்டல குழு கூட்டம், மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையிலுள்ள மண்டல அலுவலகத்தில் நடந்தது.
இதில், 129வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரவி சங்கர் பேசியதாவது:
கடந்த மழைக்காலத்தில் எந்தளவிற்கு அதிகாரிகள் பணி செய்தார்களோ, அதே அளவிற்கு மழை பாதிப்புகளை சீர் செய்ய அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
என் வார்டில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. அவற்றை விரைவாக சீர் செய்ய வேண்டும். விருகம்பாக்கம் கால்வாயில் மடைமாற்றம் செய்து சின்மயா நகர், சாய் நகர், காளியம்மன் கோவில் தெரு வழியாக, 127வது வார்டில் உள்ள கழிவுநீர் உந்து நிலையம் அருகே உள்ள கால்வாயில் இணைக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால், விருகம்பாக்கம் கால்வாய் நிரம்பி வழிந்து, வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், 133வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஏழுமலை பேசியதாவது:
தி.நகர் பஜனை கோவில் தெருவில் நடிகர் விஷால் சார்பில், லாரியில் குடிநீர் வழங்கப்பட்டது.
தி.நகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், கவுன்சிலர் கூறியும் லாரி தண்ணீரை அளிக்காத குடிநீர் வாரிய அதிகாரிகள், தனி நபருக்கு எப்படி லாரி தண்ணீர் அனுப்பினர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்த குடிநீர் வாரிய அதிகாரிகள், குடிநீர் வாரியம் சார்பில் தண்ணீர் வழங்கப்படவில்லை. அவர்கள் தனியார் லாரி வாயிலாக குடிநீர் வழங்கியுள்ளனர்.
அந்த தண்ணீர் தரமாக இருக்காது என்பதால், வழங்கக் கூடாது என, அவர்களை தடுத்து விட்டோம்' என, பதில் அளித்தனர்.
பகுதி உதவி பொறியாளர் விஷ்ணு கூறியதாவது:
முறையாக குடிநீர் வழங்கப்படாததற்கு அரசு தான் காரணம். தி.நகர், கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வழங்கப்படுகிறது.
ஓட்டுக்காக செல்லும் போது, மக்கள் கழிவுநீர் மற்றும் குடிநீர் பிரச்னையை தான் கூறுவர். அதற்காக, இந்த ஆட்சியிலும் கடந்த ஆட்சியிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 30 ஆண்டுகளாக எந்த அரசும், குடிநீர் குழாயை மாற்றி அமைக்க முன்வரவில்லை. சிறிய பராமரிப்பு பணிகளையும் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்றால், 40 முதல்- 50 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும்.
கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலத்திற்கு 24 மணி நேரம் குடிநீர் வழங்க, 1984 கோடி ரூபாயில் ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், 127வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் லோகு பேசியதாவது:
என் வார்டு அலுவலக கட்டடம் மிகவும் பழமையானது. அதை இடித்து விட்டு, புது கட்டடம் கட்ட ஒப்பந்தம் கோரப்பட்டு, இன்னும் பணிகள் மேற்கொள்ளவில்லை.
குடிநீர் பிரச்னைகளால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. கங்கையம்மன் கோவில் தெருவில், குடிநீர் இணைப்பு இல்லாமல், பகுதிமக்கள் குடிநீர் வரி கட்டி வருகின்றனர்.
முதல்வர் காலை சிற்றுண்டி உணவு திட்டத்திற்கு, குழந்தைகளுக்கு உணவு சமைக்க லாரி தண்ணீர் கேட்ட போது, குடிநீர் வாரியம் வழங்கவில்லை. அதற்கும் உயரதிகாரிகள் உத்தரவு தேவை என்கின்றனர்.
இதனால், வேறு தண்ணீரில் சிற்றுண்டி சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த தண்ணீர் பிரச்னையால், குழந்தைகளுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதிகாரிகள் பொறுப்பேற்பார்களா?
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், 130வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பாஸ்கர் பேசியதாவது:
'மிக்ஜாம்' புயல் தாக்கத்தில் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடபழனி அழகிரி நகர் ஐந்தாவது தெருவில் நெடுஞ்சாலை துறை பணியின் போது, குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய் சேதமடைந்தது. அவை இதுவரை சீர் செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

