/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் திறந்த மருத்துவமனையில் டாக்டர் இல்லாமல் நோயாளிகள் ஏமாற்றம்
/
முதல்வர் திறந்த மருத்துவமனையில் டாக்டர் இல்லாமல் நோயாளிகள் ஏமாற்றம்
முதல்வர் திறந்த மருத்துவமனையில் டாக்டர் இல்லாமல் நோயாளிகள் ஏமாற்றம்
முதல்வர் திறந்த மருத்துவமனையில் டாக்டர் இல்லாமல் நோயாளிகள் ஏமாற்றம்
ADDED : ஜன 24, 2024 12:27 AM
திருவான்மியூர்,அடையாறு மண்டலம், 180வது வார்டு, திருவான்மியூர் வார்டு அலுவலகம் அருகில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது. திருவான்மியூர் சுற்றுவட்டார பகுதியினர் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர்.
கட்டடம் மிகவும் சேதமடைந்ததால், 2021ல் அருகில் உள்ள ஒரு சமுதாய நலக்கூடத்திற்கு மருத்துவமனை மாற்றப்பட்டது.
கட்டடத்தை இடித்து, அதில் 4.92 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டும் பணி, 2022 பிப்., மாதம் துவங்கியது.
மொத்தமுள்ள, 11,830 சதுர அடி இடத்தில், 13,385 சதுர அடி பரப்பில், 26 அறைகளுடன் இரண்டடுக்கு கட்டடம் கட்டப்பட்டது. தரை தளத்தில் அவசர சிகிச்சை, புறநோயாளிகள் சிகிச்சை, பல் மருத்துவ சிகிச்சை, மருந்தகம், எக்ஸ் - ரே, ரத்த பரிசோதனை கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது.
முதல் தளத்தில் சித்தா, ஆயுர்வேதா, யோகா, மருந்து பொருட்கள் சேமிப்புக் கூடம், நிர்வாக அறை மற்றும் பயிற்சிக் கூடம் உள்ளது. இந்த கட்டடத்தை, கடந்த 5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சமுதாய நலக்கூடத்தில் இருந்து புது கட்டடத்திற்கு மருத்துவமனை மாற்றப்பட்டது. ஆனால், மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
அடையாறு, இந்திரா நகர் மருத்துவமனையில் இருந்து, சில மணி நேரம் டாக்டர் வந்து செல்கிறார். முழு நேரமாக நியமிக்கவில்லை. மேலும், எக்ஸ் - ரே, ரத்த பரிசோதனை, சித்தா, ஆயுர்வேதா, யோகா உள்ளிட்ட பிரிவுகளும் செயல்படத் துவங்கவில்லை. புதிய கட்டடம் கட்டியும், அதை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வராததால், திருவான்மியூர் பகுதியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
உயர் அதிகாரிகள் தலையிட்டு, முழு நேர டாக்டர் நியமித்து, அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

