/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆக்கிரமிப்பால் திணறும் ஆண்டவர் கோவில் தெரு அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் கடும் அவதி
/
ஆக்கிரமிப்பால் திணறும் ஆண்டவர் கோவில் தெரு அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் கடும் அவதி
ஆக்கிரமிப்பால் திணறும் ஆண்டவர் கோவில் தெரு அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் கடும் அவதி
ஆக்கிரமிப்பால் திணறும் ஆண்டவர் கோவில் தெரு அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் கடும் அவதி
ADDED : பிப் 12, 2024 01:38 AM

வடபழனி:பிரசித்தி பெற்ற வடபழனி ஆண்டவர் கோவிலில், தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
சில ஆண்டுகளாக, வடபழனி ஆண்டவர் தெருவில் பூஜை பொருள் கடைகள், பூக்கடைகள் மற்றும் நெறிமுறை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால், சன்னிதி தெரு மற்றும் மாடவீதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆற்காடு சாலையில் இருந்து வடபழனி ஆண்டவர் கோவில் நுழைவாயில் வரை, 40 அடி அகல சாலை உள்ளது. சாலையின் இருபுறமும் கடைகள், உணவகங்கள் என, நடைபாதையும் மாயமாகி உள்ளன.
அதுமட்டுமல்லாமல், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து கண்டமேனிக்கு நிறுத்தி செல்வதால், 40 அடி சாலை 20 அடி சாலையாக குறுகி நெரிசல் என்பது தொடர்கதையாக மாறிவிட்டது.
இதனால், பக்தர்கள், பாதசாரிகள் விபத்து அபாயத்தில் சாலையில் நடந்து செல்லும் அவலம் உள்ளது. இது குறித்து பக்தர்கள் தரப்பில் பலமுறை புகார் தெரிவித்தும், போலீசாரோ, மாநகராட்சி அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இது குறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:
போக்குவரத்தை சீர்செய்ய போதுமான போலீசார் பணியில் ஈடுபடாத காரணத்தால், விபத்து உயிர்பலி அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பிற பகுதிகளில் இருந்து கோவிலுக்கான வழித்தடமும் போக்குவரத்து போலீசாரால் மூடப்பட்டது. இது, ஆண்டவர் தெருவில் மேலும் நெரிசல் அதிகரிக்க காரணமாகி உள்ளது.
இந்நிலையில், நேற்று முகூர்த்த நாள் என்பதால், அதிகாலை முதல் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். ஆண்டவர் தெருவும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. விசேஷ நாட்களில், கோவில் பகுதியில் போதிய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டிய போக்குவரத்து போலீசாரோ, மாநகராட்சி அதிகாரிகளோ இதை கண்டுகொள்ளவில்லை. இதனால், நெரிசல் மற்றும் விபத்து அபாயத்தில் பக்தர்கள் திக்குமுக்காடினர்.
குறிப்பாக, திருமணத்திற்கு வந்த குடும்பத்தினர், குழந்தைகளுடன் வந்த பெற்றோர், முதியோர் கடும் அவதிக்குள்ளாகினர்.
நிம்மதியாக கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது என அவர்கள் குமுறினர். இதுபோன்ற வேளைகளில், அவரச சேவை வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலைமை உள்ளது.
எனவே, பக்தர்கள் நலனை கருத்தில் வைத்து, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பகுதிவாசிகள் கூறுகையில், 'வடபழனி ஆண்டவர் கோவில் நுழைவு சாலையான ஆண்டவர் தெருவை, ஒரு வழிப்பாதையாக மாற்றுவதே, நெரிசலுக்கு தீர்வாக இருக்கும்.
'அதேபோல, முகூர்த்த நாட்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போதிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்' என்றனர்.

