/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் ஓட்டுச்சாவடிகள் 4,071 ஆக உயர்வு
/
சென்னையில் ஓட்டுச்சாவடிகள் 4,071 ஆக உயர்வு
UPDATED : செப் 24, 2025 11:47 AM
ADDED : செப் 24, 2025 12:41 AM
சென்னை : மறு சீரமைப்புக்குப்பின், சென்னை மாவட்ட ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 4,071 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை மாவட்டத்தில், ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பாக, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், இந்தாண்டு ஜன., 6ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்களின்படி, சென்னையில், 19.70 லட்சம் ஆண் வாக்காளர்கள், 20.44 லட்சம் பெண் வாக்காளர்கள், 1,276 மூன்றாம் பாலினத்தவர்கள், 10,736 மாற்றுத்திறனாளிகள் என, 40.15 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சென்ன மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில், 3,718 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 1,200க்கும் அதிகமான வாக்காளர்கள் கொண்ட ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, 353 ஓட்டுச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போது, ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை, 4,071 ஆக உயர்ந்துள்ளதாக, கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்தார்.
கூட்டத்தில், பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட விபரங்கள் குறித்து, தி.மு.க., பிரதிநிதி சந்துரு பேசினார். இதற்கு, பா.ஜ., சார்பில் பங்கேற்ற கராத்தே தியாகராஜன் எதிர்ப்பு தெரிவித்தால் வாக்குவாதம் ஏற்பட்டது.
கமிஷனர் குமரகுருபரன் தலையிட்டு, 'பீஹார் விபரங்களை பேச வேண்டாம். சென்னை தொகுதி பிரச்னை பற்றி மட்டும் பேசுங்கள்' என, அறிவுறுத்தினார்.

