ADDED : பிப் 02, 2024 07:31 AM
: சென்னை,: ஸ்ரீதேவி நிருத்தியாலயா நாட்டியக்குழு சார்பில் 2010ல் ஆரம்பிக்கப்பட்ட சத்யம் சிவம் சுந்தரம் நடன விழா, 15ம் ஆண்டாக தற்போது துவங்கி நடந்து வருகிறது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 31ம் தேதி துவங்கி பிப். 4ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. நாட்டியவிழாவை நேற்று முன்தினம் வி.வி.சுந்தரம் துவக்கி வைத்தார்.
ஸ்ரீதேவி நிருத்யாலயாவின் நிறுவனரும் இயக்குநருமான ஷீலா உன்னிகிருஷ்ணன் கூறியதாவது:
சத்யம் சிவம் சுந்தரம் நடன விழா, நடனக் குருக்களான மறைந்த டாக்டர் வேம்படி சின்ன சத்யம் (குச்சிப்புடி), ரயில்வே சுந்தரம் (மெலட்டூர் பாணி பரதநாட்டியம்) மற்றும் ‛சுப்ரீம்' சிவா நடனத்தின் இறைவன் ஆகியோருக்கு வணக்கம் செலுத்தும் வகையிலும், மகா குருக்களுக்கு பாடலாகவும் இந்த நடன விழா தொடங்கப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள பாரம்பரிய நடனக் கலைஞர்களுக்கு இலவச மேடையை வழங்குவதே இந்த விழாவின் முதன்மையான குறிக்கோள். எங்களின் ‛எஸ்எஸ்எஸ் - 2024', சென்னையில் உள்ள மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடத்தப்படுகிறது.
‛சத்யம் சிவம் சுந்தரம்' நடனவிழாவில் நடிப்பதற்கு இந்தியாவின் பல பாரம்பரிய வடிவங்களின் மிளிரும் நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். லீலா சாம்சன், பிராகா பாஸல், ராதா ராமநாதன், மொசலிகாந்திஸ், நீனா பிரசாத், ரோஜா கண்ணன், கபிலவேணு, ஏ.லக்ஷ்மன், பூர்வதனஸ்ரீ, லட்சுமி மேனன், ஸ்ரீமதி. கோபிகா வர்மா, பார்ஷ்வநாத் உபாத்யே போன்றவர்கள் இவற்றில் குறிப்பிட வேண்டியவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்
விழாவின் முதல் நாளான ஜன.31ம் தேதி குமாரி காமேஸ்வரி கணேசனின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், கிருபாஸ் பைன்ஆர்ட்ஸ் குழுவினரின் பரதநாட்டியும் அரங்கேறியது.
நேற்று குமாரி அஷ்மிதா ஜெயபிரகாஷ், அஞ்சலி விஷ்வேஷ் மற்றும் ப்ரியதர்ஷினி கோவிந்த் ஆகியோரின் பரதநாட்டிம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று, தேஷ்னா சாகர் பரதநாட்டியமும், ரோஜா கண்ணன் மற்றும் ப்ரியா முரளி குழுவின் ‛திருமயிலை குறவஞ்சி' நடன நாடகமும் அரங்கேறுகிறது.
நாளை சாய் பிருந்த ராமச்சந்திரனின் நாட்டியமும், ஹரி ராமமூர்த்தி குழுவின் குச்சிப்புடி நடன நாடகமும் அரங்கேற உள்ளது.
இறுதி நாளான பிப். 4ம் தேதி ஹிமான்சு ஸ்ரீவத்சவ் நாட்டியமும், ஸ்ரீதேவி நிருத்யாலயா ‛ஜனனி ஜகத் கரணி' என்ற நடன நாடகமும் அரங்கேற்றப்பட உள்ளது.

