/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேலையூரில் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் அடையாளம் தெரிந்தது 'இன்ஸ்டா' பழக்கத்தால் விபரீதம்
/
சேலையூரில் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் அடையாளம் தெரிந்தது 'இன்ஸ்டா' பழக்கத்தால் விபரீதம்
சேலையூரில் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் அடையாளம் தெரிந்தது 'இன்ஸ்டா' பழக்கத்தால் விபரீதம்
சேலையூரில் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் அடையாளம் தெரிந்தது 'இன்ஸ்டா' பழக்கத்தால் விபரீதம்
ADDED : ஜூலை 03, 2025 12:38 AM

சேலையூர், தாம்பரம் - வேளச்சேரி சாலையோரம் இறந்து கிடந்த வாலிபரின் அடையாளம் தெரிந்தது. 'இன்ஸ்டா'வில் பழகிய பெண்ணிடம் வாங்கிய பணத்தை திருப்பி தராததால், அடித்து கொல்லப்பட்டது விசாரணையில் அம்பலமானது.
தாம்பரம் - வேளச்சேரி சாலையில், சந்தோஷபுரம் வனத்துறை அலுவலகம் அருகே, கடந்த 27ம் தேதி இரவு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சாலையோரமாக இறந்து கிடந்தார்.
ரோந்து போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்த நபர் குறித்த விபரங்களை சேகரித்து, சேலையூர் போலீசார் விசாரித்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்ததில், இரண்டு பேர் அந்த நபரை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து, போட்டுவிட்டு செல்வது பதிவாகியிருந்தது.
அந்த வாகனத்தின் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். இதில், இறந்த நபர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரியாணி மாஸ்டர் ஜெயகுமார், 35, என்பதும், ஆறு பேர் சேர்ந்து, அவரை சரமாரியாக அடித்து கொன்று சாலையோரம் வீசியதும் தெரியவந்தது.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:
வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 35. கிண்டி, மடுவன்கரையில் தங்கி, அங்குள்ள ஒரு ஹோட்டலில், பிரியாணி மாஸ்டராக பணி புரிந்தார். மனைவி மற்றும் மகளை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளத்தின் மூலம், சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் ஜெயகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பெண் வேலை தேடிவந்த நிலையில், தனக்கு தெரிந்த அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, அப்பெண்ணிடம் பழகியதோடு, அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதை நம்பி, அப்பெண், 11,000 ரூபாய் மற்றும் ஒரு மோதிரத்தை ஜெயகுமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால், கூறியபடி, வேலையும் வாங்கி தரவில்லை. பணம் மற்றும் மோதிரத்தையும் திருப்பி தரவில்லை.
இது தொடர்பாக தகராறு ஏற்பட இருவரும் பிரிந்துள்ளனர்.
இந்த நிலையில், தன்னுடைய பணம் மற்றும் மோதிரத்தை வாங்கி தரும்படி, அப்பெண் தன் சித்தி மகனான, குரோம்பேட்டையைச் சேர்ந்த சரவணன் என்பவரிடம் கூறியுள்ளார்.
ஜூன் 26ம் தேதி, சரவணன் தன் நண்பரான, சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த விக்கியுடன் சென்று ஜெயகுமாரை, இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளனர். பின், சிட்லப்பாக்கத்திற்கு அழைத்து சென்று, மேலும் நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து, அனைவரும் மது அருந்தியுள்ளனர்.
போதை தலைக்கேறியதும், பணம் மற்றும் மோதிரத்தை கேட்டு தகராறு செய்து, ஜெயகுமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின், குன்றத்துாருக்கு அழைத்து சென்று, அங்கு வைத்தும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில், ஜெயகுமார் மயக்கமடைந்ததை அடுத்து, ஜூன் 27ம் தேதி இரவு, இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து, சந்தோஷபுரம் அருகே துாக்கி வீசி சென்றுள்ளனர்.
இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து, பெண்ணின் உறவினரான குரோம்பேட்டையைச் சேர்ந்த சரவணன், 32, பள்ளிக்கரணையைச் சேர்ந்த தினேஷ் என்கிற தயனீஷ்வரன், 33, குரோம்பேட்டையைச் சேர்ந்த ராகேஷ், 24, பிரதீப், 24, சச்சின் என்கிற புவனேஸ்வரன், 20, சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ்வரன், 31, ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு, போலீசார் கூறினர்.