/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது அறிவிப்பு எச்சரிக்கை பலகை ஆக்கிரமிப்பாளர்கள் எரித்து அடாவடி
/
பொது அறிவிப்பு எச்சரிக்கை பலகை ஆக்கிரமிப்பாளர்கள் எரித்து அடாவடி
பொது அறிவிப்பு எச்சரிக்கை பலகை ஆக்கிரமிப்பாளர்கள் எரித்து அடாவடி
பொது அறிவிப்பு எச்சரிக்கை பலகை ஆக்கிரமிப்பாளர்கள் எரித்து அடாவடி
ADDED : ஜன 19, 2024 12:16 AM

செங்குன்றம், அரசு நிலத்தின் ஆக்கிரமிப்பை தடுக்க, வருவாய்த் துறையினரால் வைக்கப்பட்ட பொது அறிவிப்பு எச்சரிக்கை பலகை, ஐந்து நாட்களில் காணாமல் போனது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, புழல் ஊராட்சி ஒன்றியம், விளாங்காடுபாக்கம் ஊராட்சி, பள்ளிக்குப்பம் சாலையையொட்டி, வெள்ளப்புத்துார் ஏரி உள்ளது.
அரசு வருவாய்த்துறை பதிவேட்டில், 2.82 ஏக்கர் என, ஏரியின் பரப்பளவு பதிவாகி உள்ளது. அந்த இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில், தனியார் சிலர் கட்டட இடிபாடு உள்ளிட்ட மண் கழிவுகளை கொட்டி வைத்திருந்தனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தனர்.
அவர், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன் பின் வருவாய்த் துறையினர், மேற்கண்ட இடத்தில் உருவாகும் ஆக்கிரமிப்பை தடுத்து, இடத்தை மீட்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம், 11ம் தேதி பொது அறிவிப்பு எச்சரிக்கை பலகை வைத்தனர்.
பொங்கல் முடிந்த நிலையில், அந்த பொது அறிவிப்பு பலகை இருந்த இடம் தெரியாமல், காணாமல் போயிருந்தது. அதை, ஆக்கிரமிப்பாளர்கள், போகி கொண்டாட்டத்தில் எரித்து சாம்பலாக்கியது, செங்குன்றம் வருவாய்த் துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரிந்தது.
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கே சவால் விடும் ஆக்கிரமிப்பாளர்களின் செயலால், வருவாய்த் துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

