sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கர்நாடக இசை கச்சேரி உலகில் இது புதுமை!

/

கர்நாடக இசை கச்சேரி உலகில் இது புதுமை!

கர்நாடக இசை கச்சேரி உலகில் இது புதுமை!

கர்நாடக இசை கச்சேரி உலகில் இது புதுமை!


ADDED : ஜன 20, 2024 11:59 PM

Google News

ADDED : ஜன 20, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க லை உலகில் தன் இசை அறிவால் பல புரட்சிகளையும், புதுமைகளையும் நிகழ்த்தி வருபவர் வித்வான் டி.எம்.கிருஷ்ணா, ஆழ்வார்பேட்டையில் உள்ள சங்கீத வித்வத் சபையில், 13 இசைக் கலைஞர்களை கொண்டு அவர் நிகழ்த்திய இசைக்கச்சேரி, உங்கள் பார்வைக்கு...

சபாவில் உள்ள திரை விலகியதும் பின்னே உள்ள திரையில் 'மிருதங்க வித்வான்' பூங்குளம் சுப்பிரமணியனும், 'மிருதங்க வித்வான்' சிவராமனும், ஒரு அபிப்பிராயத்தை மாறி மாறி, குறைத்துக் கொண்டே இசைத்து வந்தனர்.

இசைத்துக் கொண்டிருக்கையிலேயே, இவர்களுடன் 'கடம் வித்வான்' குரு பிரசாத்தும், 'கடம் வித்வான்' சந்திரசேகர சர்மாவும் இணைந்தனர். நுட்பமான கோர்வையோடு பிரமாண்டமாக நிறைவு செய்தனர்.

மறுபடியும், பின்னால் உள்ள திரையில் பூங்குளம் சுப்பிரமணியம் இசைக்க, அந்த வீடியோவின் முடிவைத் தொடர்ந்து கடம் வித்வான் குரு பிரசாத் இசைக்க, மறுபடியும் பின்னால் உள்ள திரையில் மிருதங்க வித்வான் சிவராமன் இசைக்க, அதன் முடிவை தொடர்ந்து, கஞ்சிரா வித்வான் அனிருத் ஆத்ரேயா இசைத்தார்.

மீண்டும், பின் உள்ள திரையில், சிவராமன் இசைக்க, அதன் முடிவிலிருந்து தொடர்ந்தார் கடம் வித்வான் சந்திரசேகர் சர்மா.

இதற்கிடையே மீதம் உள்ள வித்வான்கள் அனைவரும் மேடையில் அமர்ந்தனர். ஒரு புதுமையான துவக்கத்துடன் கச்சேரி துவங்கியது.

இசை சங்கமம்


இது எல்லாருக்கும் ஓர் ஆவலை ஏற்படுத்தியது என்றே கூற வேண்டும். துவக்கத்திலேயே லயக் கருவிகளை வைத்து, ஓர் இசை சங்கமம் போல ஒன்றிணைத்தது அருமையோ அருமை.

பின் 'கஞ்சிரா வித்வான்' அனிருத் ஆத்ரேயா, 'கடம் வித்வான்' குரு பிரசாத், 'கடம் வித்வான்' சந்திரசேகர சர்மா ஆகியோர் மாறி மாறி இசைக்க, அப்படியே தங்களது வாசிப்பின் சத்தத்தை குறைத்துக் கொண்டே வந்தனர்.

இறுதியில் ஒரு நிலையை எட்டியவுடன் 'வயலின் வித்வான்' ஆர்.கே.ஸ்ரீராம் குமார் இசைக்க துவங்கினார். இவர்களுடன் மிருதங்க வித்வான் அருண்பிரகாஷ் இசைத்தார். தொடர்ந்து வித்வான் டி.எம் கிருஷ்ணா பாடத் துவங்கினார். மீண்டும் ஆர்.கே.ஸ்ரீராம் குமார் இசைக்க, மீண்டும் சிறிது நேரத்தில் டி.எம்.கிருஷ்ணா பாடத் துவங்கினார்.

இதில் 'நின்னு சூட...' எனும் வரிகளை விதுாஷி சங்கீதா, வித்வான் டி.எம்.கிருஷ்ணா, ஆர்.கே ஸ்ரீராம் குமார் ஆகியோர் மாறி மாறி பாடவும் இசைக்கவும் செய்தனர். பிறகு 'மாத்தே மலையத்வஜ...' எனும் வர்ணத்தின் சிட்டை ஸ்வரங்களை பாடினர்.

பிறகு வயலின் விதுஷி அக்கரை சுபலட்சுமி, வயலின் வித்வான் ஹெச்.என்.பாஸ்கர், மிருதங்க வித்வான் பிரவீன் ஸ்பர்ஸ், வயலின் விதுாஷி ஹேமலதா ஆகியோர் ஒன்றாக இசைக்கத் துவங்கினர்.

நிறைவாக இந்த வர்ணத்தை நிறைவு செய்தனர். பின் ஆர்.கே.ஸ்ரீராம் குமார் அவர்கள் பெஹாக் ராகத்தை இசைக்க அதைத் தொடர்ந்து, அக்கரை சுபலட்சுமியும் ஹெச்.என்.பாஸ்கரும், விதுாஷி ஹேமலதாவும் இசைக்கத் துவங்கினர்.

அடுத்தபடியாக இந்த ராகத்தில் அமைந்த ''கிருஷ்ணா நீ பேகனே பாரோ...'' என்ற மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த பாடலை பாடினர். இந்தப் பாடலில் இரண்டு வயலின் விதுாஷிகளும், இரண்டு வயலின் வித்வான்களும் மாறி மாறி பாடலின் இடையே சில வரிகளை தங்கள் கருவிகளில் கையாண்டனர். இப்படி சென்று கொண்டிருக்க வயலின் வித்வான்கள் மற்றும் விதுாஷிகள் ஒரு ராகமாலிகையை உருவாக்கினர். இது கேட்போர் மனதை கவர்ந்தது.

இடைவேளை


சங்கீத உலகில் புதுமையாக, 10 நிமிட இடைவெளி அளிக்கப்பட்டது பாராட்டப்பட வேண்டியதே!

இந்த இடைவெளியில், சபாவின் தரைத்தளத்தில் சில தில்லானாக்களை கொண்ட ஒரு கச்சேரி துவங்கியது. இங்கு விதுாஷி அக்கரை ஸ்வர்ணலதா, விதுாஷி ஸ்ரேயா தேவ்நாத், வித்வான் சாய் ரக்ஷித் ஆகியோர் வயலின் இசைக்க, அனிருத் ஆத்ரேயா, பிரவீன் ஸ்பர்ஸ் ஆகியோர் லய சொற்களை வைத்து, இடைவெளியை அழகான நினைவுகளாக்கினர்.

இடைவேளை நிறைவடைய, மீண்டும் சபாவில் விதுாஷி சங்கீதா 'தோடி வர்ணம்' பாட வித்வான் டி.எம்.கிருஷ்ணா 'கல்யாணி வர்ணம்' பாட இருவரும் வர்ணத்தின் ஒவ்வொரு பகுதிகளையும் மாறி மாறி சிட்டை ஸ்வரங்கள் வரை பாடினர். இது ஒரு புது முயற்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் அமைந்தது.

பிறகு பெஹாக் ராகத்தில் 'முருகனின் மறு பெயர் அழகு...' என்ற பாடலை பாடி நிறைவு செய்தனர். சபாவில் திரை மூடியது. எல்லாரும் ஒரு நிமிடம் யோசிக்க, வயலின் கலைஞர்கள் மூடிய திரை முன் அமர்ந்து 'வெஸ்டர்ன் நோட்ஸ்' மற்றும் ரசிக்கத்தக்க மற்றொரு இசை உருப்படியை மேற்கத்திய இசை முறையில் இசைத்து வித்தியாசப்படுத்தினர்.

பின் மேடையில் வித்வான் டி.எம். கிருஷ்ணா அவர்கள் மட்டும் அமர்ந்திருக்க, பின் உள்ள திரையில் இவர் பாடிய ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் இடையில் இருந்து இவர் பாடத் துவங்கினார். பெஹாக் ராகத்தில் 'எனக்கு வரம் ஒன்று வேண்டும் எல்லோரும் மகிழ்வாய் வாழ்ந்திட...' எனும் வரிகளை அழகாக கையாண்டார்.

நிறைவாக தில்லானா பாடி தாங்கள் எடுத்த ஒரு புது முயற்சியில் வெற்றி நாட்டி, அனைத்து இசைக் கலைஞர்களும் மகிழ்ச்சியோடு ரசிகர்களை ரசிக்க வைத்து தானும் மகிழ்ந்தனர்.

மொத்தத்தில் கச்சேரி கர்நாடக இசை உலகில், ஒரு புதுமை; ஒரு தனித்துவம்; ஒரு துவக்கம் என்றே கூற வேண்டும்.

- சத்திரமனை ந.சரண்குமார்.






      Dinamalar
      Follow us