/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொங்கல் கொண்டாட புறப்பட்டோர்... 8.50 லட்சம்! பிரதான சாலைகளில் வாகன நெரிசல்
/
பொங்கல் கொண்டாட புறப்பட்டோர்... 8.50 லட்சம்! பிரதான சாலைகளில் வாகன நெரிசல்
பொங்கல் கொண்டாட புறப்பட்டோர்... 8.50 லட்சம்! பிரதான சாலைகளில் வாகன நெரிசல்
பொங்கல் கொண்டாட புறப்பட்டோர்... 8.50 லட்சம்! பிரதான சாலைகளில் வாகன நெரிசல்
ADDED : ஜன 13, 2024 11:47 PM

சென்னை, பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட, சென்னையில் இருந்து இரண்டாவது நாளாக நேற்று, லட்சக்கணக்கானோர் புறப்பட்டு சென்றனர்.
பயணியர் கூட்டத்திற்கு ஏற்ப, பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் வரிசைப்படுத்தி இயக்கி வருகின்றனர்.
திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் வகையில், பேருந்து நிலையங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தனர்.
அரசு, தனியார் பேருந்துகள், கார் போன்ற சொந்த வாகனங்கள் என, ஒரே நேரத்தில் நேற்று திரண்டு சென்றதால், சென்னையில் முக்கிய நுழைவு பகுதிகளான ஜி.எஸ்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை, வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகள், விரைவு போக்குவரத்துக் கழகத்தைத் தவிர்த்த அனைத்து போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளும், கோயம்பேடில் இருந்து இயக்கப்படுகின்றன.
ஆனால், தாங்கள் பயணிக்க வேண்டிய பேருந்துகள் எங்கிருந்து கிளம்புகின்றன என தெரியாமல், பயணியர் குழப்பம் அடைந்தனர்.
இதனால் அவர்கள், கோயம்பேட்டுக்கு வந்து தகவல் மையத்தில் கேட்டு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்கு புறப்பட்டு சென்றனர். முன்பதிவு செய்த பயணியரே பெரும்பாலும் அவதிக்குள்ளாகினர்.
பயணியர் கூறியதாவது:
முன்பதிவு செய்த பயணியரை, நடத்துனர்கள் மொபைல் போனில் அழைத்து, கிளாம்பாக்கம் வருமாறு அழைக்கின்றனர். கோயம்பேடில் இருந்து பேருந்துகள் புறப்பட்டாலும், கிளாம்பாக்கமே வரச்சொல்வதால், கோயம்பேடு வந்த அங்கிருந்து கிளாம்பாக்கம் செல்ல வீண் அலைச்சல் ஏற்படுகிறது.
பொங்கல் கடைசி நேரத்தில் இந்த மாற்றங்கள் செய்தததால், போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் வீண் தகராறு ஏற்படுகிறது.
அதேபோல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நகரின் பிரதான பகுதிகளுக்கு, மாநகர சொகுசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
வடசென்னையில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல இரண்டு பேருந்துகளை மாறி சென்றாலே, 60 ரூபாய் கட்டணம் ஆகி விடுகிறது. இத்தடங்களில் சாதாரண கட்டண பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்குவதால், கோயம்பேடில் நெரிசல் குறைந்துள்ளது. பயணியர் கூட்டத்தை பொறுத்து, கூடுதலாக பேருந்துகளை இயக்க உள்ளோம்' என்றனர்.
அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் ரயில்களில் இருந்து என, கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 8.50 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, அரசு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பேருந்துகள் இயக்கம், குறைபாடு குறித்து பயணியரிடம் கேட்டறிந்தார்.

