/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பிற நாட்டு வாழ்க்கையை அறிய மொழிபெயர்ப்புகள் தான் ஒரே வழி'
/
'பிற நாட்டு வாழ்க்கையை அறிய மொழிபெயர்ப்புகள் தான் ஒரே வழி'
'பிற நாட்டு வாழ்க்கையை அறிய மொழிபெயர்ப்புகள் தான் ஒரே வழி'
'பிற நாட்டு வாழ்க்கையை அறிய மொழிபெயர்ப்புகள் தான் ஒரே வழி'
ADDED : ஜன 19, 2024 12:10 AM

நல்ல படைப்புகளை தமிழுக்கு கொண்டு வரும் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், திறனாய்வாளர் என பன்முகம் கொண்டவருமான பேராசிரியர் ராமகுருநாதனிடம் பேசியதில் இருந்து...
மொழிபெயர்ப்புகள் ஏன் அவசியம்?
இதிகாசங்கள், புராணங்கள் என, பழங்காலத்தில் இருந்தே மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் தமிழில் உள்ளன. படைப்பாளர்களும் வாசகர்களும், வெளிநாட்டு வாழ்வியல், இலக்கியம், அறிவியல், வரலாறு உள்ளிட்டவற்றை அறிய நினைக்கின்றனர். அதற்கு, மொழி தடையாக உள்ளது. இந்த தடையை மொழிபெயர்ப்புகளால் தான் களைய முடியும். அதுதான் ஒரேவழி.
மொழிபெயர்ப்பில் என்ன தேவை?
பிற மொழிகளில் இருந்து எடுக்கப்படும் நுால்கள் தமிழ் சூழலுக்கு உகந்ததா, படைப்பு தனித்தன்மை வாய்ந்ததா, உள்ளடக்கம், அதன் படைப்பாளர் யார் என்பதை அறிந்தே மொழிபெயர்ப்பேன். அந்த படைப்பை பலமுறை படித்து, அதன் சூழல், பண்பாடு, காலம் உள்ளிட்டவற்றில் தெளிவு பெறுவேன்.
உதாரணமாக ஜப்பானிய எழுத்தாளர் குதிரை பொங்கல் பற்றி எழுதி இருந்தால், அதை தமிழகத்தின் மாட்டுப்பொங்கலுடன் பொருத்தி விளக்குவேன்.
சிலர், சேக்குபியர், கீட்சு என பெயர்களை தமிழாக்கம் செய்வர். நான், ஷேக்ஸ்பியர், கீட்ஸ் என, அப்படியேதான் குறிப்பிடுவேன். பெயர்களை தமிழ்ப்படுத்தினால், அதன் தனித்தன்மை போய்விடும்.
மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்?
கவிதைகளில் வரும் சொற்களை அப்படியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அதன் கருத்து மாறக்கூடாது. உமர்கய்யாம் கவிதைகள் சூபி தத்துவம் போன்றது. அதை நம் கலாசாரத்துக்கு ஏற்ற சொற்களால் மொழிபெயர்க்கலாம். திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு.போப் அதன் உண்மைத்தன்மையை சிதைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. என்றாலும், படிப்பவருக்கு ஏற்றவகையில் கொண்டு சென்றது சாதனை தான்.
தமிழுக்கு எந்த இலக்கியம் தேவை?
ரஷ்ய, ஆங்கிலம், ஜப்பானியம், சீனம் உள்ளிட்ட மொழி இலக்கியங்கள் தமிழுக்கு கொண்டு வரவேண்டியது அவசியம். அதேபோல் தமிழில் இருந்து திருவள்ளுவர் மட்டுமின்றி, பாரதியார், கண்ணதாசன் வரை பலர் கவிதைகளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டி உள்ளது.
தமிழின் மொழிபெயர்ப்பு பற்றி?
மொழிபெயர்ப்புக்கான தேவை அதிகம் உள்ளது. ஆனால், போதுமான அளவில் இல்லை. நான் 13 நுால்களை மொழிபெயர்த்துள்ளேன். மத்திய அரசின் சாகித்ய அகாடமியும் மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இதுபோல், பல அமைப்புகளும் மொழிபெயர்ப்புகளை கையில் எடுக்க வேண்டும்.
-- நமது நிருபர் --

