/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேவல் சண்டைக்கு இரு நாட்கள் அனுமதி
/
சேவல் சண்டைக்கு இரு நாட்கள் அனுமதி
ADDED : ஜன 20, 2024 11:37 PM
சென்னை, தைப்பூசம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, திருப்பாச்சூரில் தங்கனுார் கிராம மைதானத்தில், வரும் 26 முதல் 28ம் தேதி வரை சேவல் சண்டை நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கவும், போலீஸ் பாதுகாப்பும் கோரி, உயர் நீதிமன்றத்தில் தேவாராம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
இரண்டு நாட்களாக, 27 மற்றும் 28ம் தேதிகளில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை, திருவள்ளூர் எஸ்.பி., கண்காணிக்க வேண்டும். கால்நடை மருத்துவரும் மேற்பார்வையிட வேண்டும். சண்டையின் போது, பறவைகளுக்கு காயம் ஏற்படக் கூடாது; போதை வஸ்துகள் அளிக்கக் கூடாது; விஷம் தோய்ந்த கத்தியை கால்களில் கட்டக் கூடாது.
இவற்றை எல்லாம், போட்டி துவங்குவதற்கு முன், கால்நடை மருத்துவர் உறுதி செய்ய வேண்டும்.
எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், நிகழ்ச்சியை நிறுத்தவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், புல்லரம்பாக்கம் போலீசார் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

