/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெரிசலான ஆலப்பாக்கம் பிரதான சாலை கைவிட்ட விரிவாக்க பணி தொடருமா?
/
நெரிசலான ஆலப்பாக்கம் பிரதான சாலை கைவிட்ட விரிவாக்க பணி தொடருமா?
நெரிசலான ஆலப்பாக்கம் பிரதான சாலை கைவிட்ட விரிவாக்க பணி தொடருமா?
நெரிசலான ஆலப்பாக்கம் பிரதான சாலை கைவிட்ட விரிவாக்க பணி தொடருமா?
ADDED : ஜன 23, 2024 12:27 AM

மதுரவாயல், வாகன போக்குவரத்து அதிகரிப்பால், மதுரவாயல் - ஆலப்பாக்கம் பிரதான சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருவதால், சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
வளசரவாக்கம் -- ஆற்காடு சாலை மற்றும் மதுரவாயல் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக, ஆலப்பாக்கம் பிரதான சாலை உள்ளது.
இச்சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் இருந்த இச்சாலை, தற்போது மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இச்சாலை, 2.9 கி.மீ., துாரம் மற்றும் 6 -- 10 மீட்டர் அகலம் கொண்டது. ஆலப்பாக்கம் பிரதான சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற, நெடுஞ்சாலை துறை திட்டமிட்டு, அதற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொண்டது.
இதையடுத்து, ஆற்காடு சாலையில் இருந்து, 600 மீ., துாரம், 25 மீ., அகலத்திற்கு சாலையை விரிவாக்கம் செய்ய, 8.2 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
மீதமுள்ள, 2.3 கி.மீ., சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. மதுரவாயல் முதல் ஆற்காடு சாலை வரை, ஆலப்பாக்கம் சாலை வழியாக, மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டு, கைவிடப்பட்டது.
தற்போது, வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், ஆலப்பாக்கம் பிரதான சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் சாலை மற்றும் பல்லவன் நகர் சாலையில் இருந்து ஆலப்பாக்கம் பிரதான சாலையில் நுழையும் வாகனங்களால், இச்சாலை சந்திப்பில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து போலீசார் இருந்தும், குறுகிய சாலையால் 20 நிமிடங்களுக்கு மேல் வாகனங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.
மேலும், அதே சாலையில் உள்ள திரையரங்கில் இருந்து வரும் வாகனங்களாலும் நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, மாநில நெடுஞ்சாலை துறை கைவிட்ட ஆலப்பாக்கம் பிரதான சாலை விரிவாக்க பணிகளை, மாநகராட்சி பேருந்து சாலை துறை மீண்டும் தொடர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

